பிரபல ஆங்கில எழுத்தாளர், ஜேம்ஸ் ஹாட்லி சேஸின், ‘டாப் த்ரில்லர்’ நாவல்களில் ஒன்றான, ‘AN ACE UP MY SLEEVE’ என்ற, ஆங்கில நாவலை, தமிழில், அகிலன் – கபிலன் மொழிபெயர்ந்துள்ளனர்.
எந்த நாட்டவருக்கும், பொருத்தமான கதைகளம். அதனால், எளிதில், நம்மை வசீகரிக்கிறது. தமிழ் மர்ம நாவலை படிப்பது போன்ற நிறைவை தருவதற்காகவே, மொழி பெயர்ப்பாளர்களுக்கு சபாஷ் போடலாம்.
வயதான, கோடீஸ்வரனான, ஹெர்மன் ரோல்பின் மனைவி, ஹெல்கா வாழ்வில் நடந்த சம்பவங்கள் தான் கதை. ஒரு வாரத்திற்குள் நடக்கும் இந்த கதைக்குள், நாமே சிக்கியது போன்ற உணர்வை தருகிறது. முக்கிய ஆறு கதை மாந்தர்களுடன், எதிர்பாராத திருப்பங்களுடன் பயணிக்கும் இந்நாவல், பரபரப்புடன் நம்மையும் அழைத்து செல்கிறது.
மிக பணக்கார பெண்மணியான ஹெல்கா, சஞ்சலத்தால் வழியற்றவனாக இருக்கும் லாரி ஸ்டீவன்ஸ் மீது ஆசைப்படுகிறார். அதன்மூலம், தன் முன்னாள் தொழில் நண்பர் ஜாக் ஆர்ச்சரின் மோச வலைக்குள் சிக்குகிறாள்.
அதிலிருந்து, ஹெல்கா எப்படி மீண்டாள்? சதி திட்டங்களை போட்டது யார்? என, பக்கத்துக்கு பக்கம் நம்மை எதிர்பார்ப்புகளுடனேயே, ஆசிரியர் அழைத்து செல்கிறார். திரில்லர் நாவல் வாசகர்களுக்கு, இந்நூல் நிச்சயம் பிடிக்கும்.
கலா தம்பி