மஹாபாரத யுத்தம் முடிந்ததும், தருமர் என்று கூறப்படுபவரான யுதிஷ்டிரன், பாரதப்போரில் இறந்தோர் பலர் தம் பங்காளிகள் என்றும், இது வெற்றியல்ல; தோல்வியே என்று கூறி மனம் வருந்துகிறார். நாரத- முனிவர், அர்ஜுனன், நகுலன், சகாதேவன், திரவுபதி, பீமன், வியாச முனிவர் ஆகியோரின் நல்உபதேசம் கேட்ட பின்னர், தருமர் மன அமைதி பெற்று பட்டாபிஷேகம் செய்து கொள்கிறார்.
தருமரின் அரச ஆணைகளும் (பக் 99), அவரின் நற்பணிகளும் (பக்101), பீஷ்மர் கூறும் 18 வகைத் துன்பங்களின் விவரமும் (பக் 141), அவர் கூறும் அரசின், 36 குணங்களும் (பக் 187) படிக்கச் சுவையாக இருக்கின்றன.
அறநெறி முதற்றே அரசின் கொற்றம் என்று புறநானூறு கூறும் கருத்தினை நூலாசிரியர், நூலின் பல இடங்களில் சுட்டிக் காட்டுவது அவரின் ஆழ்ந்த அறிவாற்றலுக்குச் சான்றாகும். எது தர்மம் என்று அறிய இந்நூலை படிக்கலாம்.
டாக்டர் கலியன் சம்பத்து