‘வர்ணசாகரம்’ என்னும் பெயருக்கேற்றாற்போல் இந்த நூல், வர்ணங்களின் கடலாகத் திகழ்கிறது. இந்த தொகுப்பில், 216 ஆதிதாள தான வர்ணங்கள், 74 அட தாள தான வர்ணங்கள், ஏனைய தாளங்களில் அமைந்த, 23 தான வர்ணங்கள், ஆறு ராகமாலிகை வர்ணங்கள், ஏழு தரு வர்ணங்கள், 89 பத வர்ணங்கள் மற்றும் சவுகவர்ணங்கள் என, மொத்தம், 415 வர்ணங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றைத் தொகுத்தவர், சங்கீத கலாநிதி, டி.கே.கோவிந்த ராவ். கி.பி., 17ம் நூற்றாண்டு முதல் தற்காலம் வரை, இசை வாணர்கள் பலர் இயற்றிய வர்ணங்கள், இந்த நூலில் ஒரு சேரக் கிடைக்கின்றன. தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மொழிகளில், ௭௦க்கும் மேற்பட்ட இசைவாணர்கள் இயற்றிய வர்ணங்கள், தெளிவான சுர, தாளக் குறிப்புகளுடன் கொடுக்கப்பட்டுள்ளன.
நூலின் முகவுரை பக்கங்களில், இந்த வர்ணங்களை இயற்றிய இசைவாணர்களின் காலம் மற்றும் அவர்கள் வாழ்ந்த நூற்றாண்டு உள்ளிட்ட செய்திகளை, தொகுப்பாசிரியர், பட்டியலிட்டுள்ளார். பல்வேறு ராகங்களிலும் தாளங்களிலும் அமைந்துள்ள இந்த வர்ணங்களின் தொகுப்பு, இசைக் கலைஞர்களுக்கும், இசை பயிலும் மாணவர்களுக்கும் பொக்கிஷமாகத் திகழ்கிறது.
அக்கரை சுபஸ்ரீ ஹரி