தேவைகளைத் தேடி ஓடும் மனிதர்களுக்கு, வியப்பாகத் தோன்றுவதை நிகழ்த்திக் காட்டி, அவர்களால் வணங்கப்பெறும் சித்தர்கள், காலந்தோறும் அவதரித்துக் கொண்டே இருப்பர் என்று சொல்லப்படுவதுண்டு. அவ்வாறான சித்தர்களின் வரிசையில் பூண்டிச்சித்தரின் வாழ்க்கையை பூண்டி மகான் நிகழ்த்திய அற்புதங்கள் என, வாழ்வியல் சித்திரமாக படைத்துள்ளார் நூலாசிரியர், அனு.வெண்ணிலா. முதல் பாகத்தில், 52 தலைப்புகளிலும், இரண்டாம் பாகத்தில், 32 தலைப்புகளிலுமாக மகான் குறித்தான சொற்சித்திரம் அழகாகத் தீட்டப்பட்டுள்ளது. தான் உணர்ந்தவற்றை வெளிப்படுத்த முயற்சிக்கும் பூண்டிச்சித்தரின் பரிவும், கருணையும் சிலிர்ப்பான நெகிழ்வை ஏற்படுத்துகிறது.
கவிதைகளாலும், ஊற்றெடுக்கும் வார்த்தை களாலும் சீர் பொருந்திய அணிவகுப்பாக மிளிர்கிறது, சம்பவங்களின் தொகுப்பு.
எங்கும் பரந்து இயங்குவது சித்தர் வாழ்வியல் இயல்பு. எனினும், ஒருபோதும் மனிதர்கள் அவர்களைத் தேடிச் செல்ல வேண்டிய தில்லை. சித்தர்களே பாமர மனிதர்களைத் தேடி வருவர் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுவதோடு, நிஜ நிகழ்வுகளை சிலிர்ப்புடன்
முன்வைக்கவும் செய்கிறது.
தன்னைக் கருவியாக்கி மனிதர்களுக்கு நிகழ்த்திக் காட்டிய மகத்துவங்களையும், அவற்றின் சாட்சிகளையும், முடிவுறாத தேடலின் வாயிலாக வழங்கிய அருளாசியையும் தெளிவாக வெளிப்படுத்துகிறது இந்த ஆன்மிக படைப்பு. எளிய, இனிய சொற்களை கொண்டு, மனதோடு உரையாடும் உணர்வான நடையில், சம்பவ நேர்த்தியோடு படைத்துள்ளார் நூலாசிரியர். நூலின் நடுவில், மகான் குறித்த போற்றி பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இரண்டாம் பாகத்தில், மற்ற சித்தர்கள், மகான்களைப் பற்றியும் நூலாசிரியர் விவரித்துள்ளார்.
ஒரு பானை சோற்றைத் தனக்குள் வடித்து, ஒரு சோறு பதமாக பூண்டிச்சித்தரின் வாழ்வினை நம்முன் படம் பிடித்திருக்கிறார்.
விரும்புவோர் பதம் பார்த்து சுவைக்கலாம்.