இன்றைய உலகில், நம் குறிக்கோள் எவ்வாறு அமைய வேண்டும், அதை எவ்விதம் அடையலாம் என, பகுப்பாயும் சுயமுன்னேற்ற நூல். தன்னம்பிக்கை, சேமிக்கும் பழக்கம், கற்பனை திறன், நேர நிர்வாகம், சகிப்புத் தன்மை என, மொத்தம், 24 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
புத்தகத்திற்கான கருத்துகளை, தேவையான அளவு பிரித்து, பகுதிகளாக கொடுத்திருப்பது வாசிப்போருக்கு வசதியாக இருக்கிறது.
நூலாசிரியர், நேரடியாக வாசகரிடம் பேசுவது போன்ற முறையை, இந்த புத்தகத்தில் கையாண்டு இருக்கிறார்.
‘பயம் தான், ஏழ்மைக்கும், தோல்விக்கும், துயரத்திற்கும் காரணம்; கடன் வாங்குவதை தவிர்த்து விடுங்கள்; கோபத்தை அனாவசியமாக வெளிப்படுத்தாதீர்’ என, வாழ்வின் முன்னேற்றத்திற்கு தேவையானவற்றை தந்திருக்கிறார். இடையிடையே, ஆன்மிக கருத்துகள், இலக்கிய மேற்கோள்கள், சம்பவங்கள் என, கட்டுரையை சுவாரசியப்படுத்தி உள்ளார்.
‘நம் கை, கால்களின் செயல்பாடுகள், முக பாவம், கண்கள் அனைத்தும், நம் எண்ணங்களை பிரதிபலிப்பவை; எனவே, அவற்றில் கவனமாக இருங்கள்’ என, வாசகனின் ஆளுமை திறமை மேம்படுத்த அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
–சி.சுரேஷ்