பெண் விடுதலையைப் பேசும் நாவல் இது. நாவலின் கதாநாயகி பள்ளிப் பருவத்தில் ஒருவனைக் காதலிக்கிறாள். அவர்கள் முத்தமிட்டுக் கொள்கின்றனர். நாயகியின் பெற்றோர் வெகுண்டு எழுந்து காதலரைப் பிரித்து, நாயகியை வேற்றூரில் படிக்க வைக்கின்றனர். 19 வயதிலேயே அவளுக்கு வலுக்கட்டாயமாக ஒரு திருமணமும் செய்கின்றனர். கட்டிய கணவன் மனதிற்கு இனியவனாக இல்லை. கணவனின் முட்டாள் தனங்களாலும், சுயநலமான நடத்தைகளாலும் கதாநாயகி மனம் சோர்ந்து போகிறாள்.
கடைசியில் தன் பள்ளிக் காதலனைச் சந்திக்கிறாள். அவன்பால் மறுபடியும் ஈர்க்கப்படுகிறாள். அப்புறம் என்ன ஆயிற்று என்பது தான் கதை. ப்ரீத்தி ஷெனாய், நெஞ்சை நெருடும், ஒரு தர்மசங்கடமான விஷயத்தை, தன் உள்ளார்ந்த பார்வை மற்றும் புத்திக் கூர்மையுடன், அதிரடி பாணியில் ஓர் அற்புதமான கதையாகத் தருகிறார். நாவலை எடுத்தால் முடிக்காமல் கீழே வைக்க முடியாது. கதாநாயகி தீக் ஷாவின் பாத்திரப் படைப்பு தனித்துவம் வாய்ந்தது. மொழிபெயர்ப்பாளர் நந்தகோபாலின் நடை, நம்மை உலுக்கி எடுக்கிறது.
– எஸ்.குரு