பாரதியார் ஒரு சித்த புருஷர். அவரின் கவிதைகள், பொதுவாக எளிமையானவை என்றாலும், அவர் காலத்திலேயே சில புரியாமல் இருந்ததால், அவற்றுக்கு அவரே பொழிப்புரை எழுதி உள்ளார். இக்காலத்திலோ, திரைப்படங்களில் வந்த அவரின் பாடல்களைத் தவிர மற்றவை, மக்களுக்கு தெரிவதே இல்லை. பல புரிவதில்லை.
எனவே, அவரின் பாடல்களுக்கு விளக்கவுரை தேவைப்படுகிறது. அதை, கவிஞர் பத்மதேவன் நிறைவு செய்துள்ளார். பாரதி கவிதைகள் பதிப்புகளில், உரையோடு அவரது கவிதைகள் வருவது இதுவே முதன் முறை. அதை செம்மையாகவும், நேர்த்தியாகவும், நிறைவேற்றி உள்ளார்,
உரையாசிரியர்.
* ‘அழகு தெய்வம்’ என்ற பாடலில், ‘ஏலத்தில் விடுவதோ எண்ணத்தை என்றேன்’ என்ற வரி, முந்தைய வரியுடன் முரண்படுவதை (பக். 398–399) பத்மதேவன் அழகாக விவரித்து, முரண்பாட்டை நீக்கி தெளிவாக்குகிறார்.
* ‘கடமை’ பாடலுக்கு கவிஞரின் குறிப்புரை (பக்.414), பாரதியின் கவிதையை மட்டுமல்ல, அவரின் மனநிலையையும் புரிந்துகொள்ள உதவுகிறது.
* ‘என்னே கொடுமை’ என்ற பாடல், பாரதியார் தன் காலத்தில் வெளிவந்த பத்திரிகை செய்திக்கு, எதிர்வினையாற்றிய கவிதை பக்கம்; அதற்கு பத்மதேவன் அளித்துள்ள குறிப்புரை நன்றாக உள்ளது.
* பாரதியாரின் வார்த்தைகள் சிலவற்றுக்கு, கவிஞரின் விளக்கம் தெளிவாக உள்ளது.
எடுத்துக்காட்டாக, (கணபதி) ‘ராயன்’ என்றால் அரசன். மகாகாளி புகழ் பாடலில், ‘அத்துவா’ என்ற சைவ சித்தாந்த பரிபாஷை சொல்லுக்கு, (பக். 322) சரியான பொருளையும் கூறியுள்ளார்.
* ‘ஆரியர்’ என்ற வார்த்தைக்கு, ‘நற்பண்புடைய மேலோர்’ என்றே பொருள் என்பதை, (பக். 995, 393, 986) தெளிவாக்குகிறார். வேளாளர் என்றால், ஈகை குணமுடையவன் என்று குறிப்பிட்டு உள்ளார்.
* பாரதியார், ‘வருண சிந்தாமணி’ என்ற நூலுக்கு எழுதியுள்ள அணிந்துரை பாடல்களில் (பக். 1027), பிறப்பை மட்டுமே அடிப்படையாக கொண்டு, பிராமணர்கள் உயர் குலத்தினர் என, தருக்கி திரிவதும், வேளாளர்களை சூத்திரர்கள் என்று இழித்துரைப்பதும் தவறு என்றும், வேதபாராயணம் செய்யும் வாழ்வை விட, வேளாளர் வாழ்வே சிறந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதையும் கவிஞர் தெளிவாக விளக்கியுள்ளார்.
* ‘துப்பு’ என்ற சொல்லுக்கு, ‘பெருமை’ என்று (பக். 894) சரியாக பொருள் கூறியுள்ளார். ‘சகோர பட்சி’ என்ற வார்த்தைக்கு (பக். 1026), கவிஞரின் விளக்கம் நன்றாக உள்ளது.
நூலின் இறுதியில், பாரதியாரின் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை, கால வரிசைப்படி கொடுத்துள்ளதும், பாடல்களின் முதற்குறிப்பை, அகர வரிசையில் வெளியிட்டிருப்பதும், நூலின் கட்டமைப்பும், அழகு சேர்க்கிறது. பாரதி பாடல்களைப் புரிந்துகொள்ள விரும்பும் இக்காலத்தவருக்கு, இது ஒரு பொக்கிஷம்.
– திருநின்றவூர் ரவிக்குமார்