இந்துக்கள், தம் இல்லங்களில் செய்துவரும் பல சடங்குகளின் அர்த்தம் தெரியாமலே செய்து வருகின்றனர். அந்த சடங்குகளின் அர்த்தங்களை மேலோட்டமாகவாவது தெரிந்து- கொள்ள, இந்த நூல் உதவுகிறது. இந்த நூலில், 24 கட்டுரைகள் உள்ளன. சோடச சம்ஸ்காரங்கள் யாவை என்று விளக்குவதும் ( பக்.14), பெயர்சூட்டல் எனும் நாமகரணம் பற்றியும், பெயரைச் சுருக்காமல் கூப்பிடுவதால் அந்த குழந்தை அடையும் பலனை கூறுவதும் (பக்.25), உபநயனம் குறித்து விளக்குவதும் (பக்.46), திருமண சடங்குகளை விரிவாக கூறுவதும் (பக்.58), ஐம்பெரும் வேள்விகளை விளக்குவதும் (பக்.103), சிரார்த்தம் குறித்து, புறநானூற்றின், 92ஆவது பாடல் அடிகளைக் கூறி விளக்குவதும் படிப்பதற்கு மிகவும் சுவையாக உள்ளன. இந்த நூலில் கூறப்படும் பல சடங்குகளுக்கு புறநானூறு, குறுந்தொகை, திருக்குறள் ஆகிய நூல்களின் துணைகொண்டு விளக்கம் அளிப்பது, நூலாசிரியரின் ஆழ்ந்த புலமைக்கு சான்று.
– டாக்டர் கலியன் சம்பத்து