‘‘அமெரிக்காவின் உதவி தூக்கு கயிறுக்கு சமமானது’’ இப்படி சொன்னவர் காந்திய பொருளியல் அறிஞர் ஜே.சி.குமரப்பா. இந்த விமர்சனம், அந்த நாட்களில் பலத்த எதிர்ப்பை சந்தித்தபோதும், குமரப்பா பின்வாங்கவில்லை. இந்திய மண்ணுக்குரிய பொருளாதாரத்தை காந்திய சிந்தனையின் அடிப்படையில், கட்டமைக்க முற்பட்டவர், குமரப்பா.
இந்த நூலை, ஆங்கிலத்தில் இருந்து, தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளவர் வெ. ஜீவானந்தம். எளிய நடையில், மொழியாக்கம் உள்ளது.
உலக சமாதான மாநாடுகளில், குமரப்பா ஆற்றிய உரைகளின் தொகுப்பு, நேரு தலைமையிலான மத்திய அரசு, கிராம வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்திய போது, அவை ஏற்படுத்திய தாக்கங்களை, கிராமங்களில் நேரடியாக சென்று ஆய்வு செய்து, அப்போதைய பிரதமர் நேருவுக்கு எழுதிய கடிதம் என, இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
விடுதலை அடைந்த உடன், அதிமுக்கிய தேவை, அணுகுண்டு வளர்ச்சியா, மானுட வளர்ச்சியா என கேள்விகளை எழுப்பி, வளர்ச்சியின் இயக்கம் எந்த திசையில் இருக்க வேண்டும் என்பதை, அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.
‘குழந்தைகளின் ஆரோக்கியம், பணத்தை விட முக்கியமானது’ என்று ஓர் இடத்தில் குறிப்பிடுகிறார். இதுபோன்ற கருத்துகள், இந்தியாவை கட்டமைத்த நேரத்துக்கு மட்டும் அல்லாமல், உலகம் முழுவதும், கிராம உற்பத்தி சார்ந்து இயங்கும் சமூகங்கள் நிறைந்த நாடுகள், உள்வாங்க வேண்டியவை. இந்த கருத்துகள் கவனிக்கப்பட்டிருந்தால், வளர்ச்சியின் அடிநாதம், பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும்.
தனித்துவம் நிறைந்த பொருளாதார கட்டமைப்புடன், இந்தியா எழுந்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.
சுயமும் கவுரவமும் தன்முனைப்பும், உள்ஒளியும் நிறைந்த ஜே.சி.குமரப்பா போன்றோரின் நேர்மையான சிந்தனை, நெருக்கடி நிறைந்த உலகின் பிரச்னைகளுக்கு, தீர்வு தேடும் வகையிலான கருத்துகளை உள்ளடக்கியுள்ளது. இந்த கருவியை பயன்படுத்தினால், மாற்றத்தின் ஊற்றுக்கண்ணை திறந்துவிடலாம். அமெரிக்கா பற்றிய அவர் கணிப்பு இப்போதும், இந்தியா எச்சரிக்கையுடன் செயல்படுவதற்கான அறிவுரையாகவே தெரிகிறது.
– மலர் அமுதன்