போர்க்களத்தில், வீர முழக்கமிடும் ஒன்பது நாடோடிப் பாடல்களை ஆய்கிறது நூல். இரவிக்குட்டிப் பிள்ளைப் போர், கான் சாகிபு சண்டை, தம்பிமார் கதை, இராமப்பய்யன் அம்மானை ஆகிய நான்கும், தமிழகத்தில், ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின்னால் எழுந்த வீர நிகழ்ச்சி போர் பாடல்கள். காசீம் படைப்போர், அலியார் படைப்போர், சைத்தூன் கிஸ்ஸா, சக்கூன் படைப்போர், மலுக்கு முலுக்கு ராஜன் கதை ஆகிய ஐந்தும் முஸ்லிம் பெயர் பூண்ட போர் பாடல்கள். வீரச்சுவை எல்லாவற்றிலும் விரவிக் கிடக்கின்றன.
‘எழு கடலுக்கு அப்புறத்தே இரும்பு அறைக்குள் இருந்தாலும், எம தூதருடன் ஆள் வந்தால் இல்லை என்றால் போவாரோ?’ மரணத்தை விமர்சிக்கும் மதிப்பான பாடலிது. போரிலும், சாவிலும் தமிழர் காட்டிய வீரம், பாடல்களில் பதிவாகி உள்ளது. ‘ஆலம் விழுது போல் அந்தப் புள்ளை தலைமயிரு தூக்கி முடிஞ்சால் என்ன தூக்கணத்தின் கூடுபோல?’ ஆலம் விழுது போன்று தொங்கும் கூந்தலை, தூக்கணாங்குருவிக் கூடு போல் கட்டச் சொல்லும் உவமை மிகவும் நயமானது.
பழமொழி, உவமைகள், நாட்டுப்புற இலக்கியத்திலும் நிரம்பிக் கிடக்கின்றன. வீரத்தில் வெளிப்படும் சோகத்தையும், இனிய நாட்டுப்புறப் பாட்டாக, நயமுடன் ஆய்வு செய்கிறது இந்த நூல்.
– முனைவர் மா.கி.ரமணன்