இந்த நாவல், நாட்டின் விடுதலைக்காக நடந்த, அகிம்சை மற்றும் தீவிரவாதம் என்ற இரண்டு வகைப் போராட்டங்களையும் சித்திரிக்கிறது. ‘வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது’ எனும் உயர்ந்த கருத்திற்கு முழுவடிவம் கொடுக்கிறது இந்த நாவல்.
காந்திய சிந்தனையே நம் நாட்டிற்கு உகந்தது. அகிம்சை எனும் கசப்பு மருந்து உட்கொள்ள சிரமம். எனினும் நிரந்தர ஆரோக்கியத்திற்கு, அதுவே கைகண்ட நிவாரணி என, ஜோதிர்லதா கிரிஜா நிறுவுகிறார்.
இந்த மகத்தான நாவலை படிப்போர், நம் விடுலை போராட்ட வரலாற்றை ஒருவாறு இனம் கண்டுகொள்ள இயலும். இந்த நாவல் இலக்கிய பொக்கிஷம். இந்த நாவலில் வரும் கதாபாத்திரம், நரேந்திரநாத் பானர்ஜி இப்படி பேசுகிறார்:
துணிவும், வீரமும் உள்ள நாமே, இப்படி மிஸ்டர் காந்தியின் மீது பிரேமை கொள்ளுதல், நம் இயக்கத்திற்கே தீதாய் முடிந்துவிடும். இந்தியா தனக்குப் பத்திரமான இடமில்லை என்ற அச்சம் ஏற்பட்டாலன்றி, வெள்ளைக்காரன் வெளியேறுவது நடக்காது. அந்த அச்சத்தை அகிம்சையால் ஒருபோதும் ஏற்படுத்தவே முடியாது. நாம் வெறும் கோழைகள் என்ற எகத்தாளமான எண்ணமே, அவனிடத்தில் மேலோங்கும். அதற்கு நாம் இடமளிக்கலாகாது (பக். 396)
– எஸ்.குரு