ராதா பட், தன் 18 வயதிலேயே கவுசானியிலுள்ள லட்சுமி ஆசிரமத்தில் சேர்ந்து, 30 ஆண்டுகளாக உத்தரகண்ட் மலைப் பகுதியில் வாழும் பெண்களுக்கு கல்விப் பயிற்சி கொடுத்துள்ளார். 1957ல் வினோபாவின் பூமிதான இயக்கத்தில் ஐக்கியமானார். உத்தரகண்ட் பகுதியில் மதுவிலக்கு இயக்கம் நடத்தி பெரும்பாலும் பெண்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்தினார்.
‘சிப்கோ’ இயக்கத்தில் ஈடுபட்டு வனப் பாதுகாப்பு, வனப் பொருட்களை நீடித்துப் பயன்படுத்தும் முறைகள் பற்றி பெண்களுக்கு கல்வி புகட்டினார். இந்த நூல், ராதா பட்டின் குழந்தை மற்றும் பள்ளிப் பருவத்தை விளக்கும் சுயசரிதை. இந்த நூல், இமயமலையின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள, குமாஊன் பகுதி கிராம மக்களின் தினசரி வாழ்க்கை, விவசாயப் பணிகள், கலாசாரம் மற்றும் உறவுகள் பற்றிய, மிகவும் அருமையான தகவல்களைத் தருகிறது. சாருமதி, இந்த நூலை வெகு சிறப்பாகத் தமிழாக்கித் தந்திருக்கிறார். சுகமான வாசிப்பு அனுபவம்.
– எஸ்.குரு