தமிழின் பழமைக்கும், பெருமைக்கும், பொதுமைக்கும் ஆதாரமானது திருக்குறள். திருவள்ளுவர், தன் இயற்பெயர், வரலாறு என்று எந்தவித சுய அடையாளங்களையும் வெளிப்படுத்தாமல், திருக்குறளை எழுதினார். அதேநேரம், அவரது காலம், 2046 ஆண்டுகளுக்கு முற்பட்டது; அவர், தொண்டை நாட்டில் மயிலாப்பூரில் பிறந்தவர்;
மதுரையில் திருக்குறளை அரங்கேற்றினார் என, பல்வேறு ஆய்வுகள் வந்துள்ளன. இந்த நூல், திருவள்ளுவர், நாஞ்சில் நாட்டில் தோன்றினார் என, ஆய்வு செய்து கூறுகிறது. ‘உக்கிரப்பெருவழுதி காலத்திலேயே, முடிசூடா பாண்டியர் குல மன்னனாக, நம்பி நெடுஞ்செழியன் வாழ்ந்தான். இந்த நம்பி நெடுஞ்செழியனே குறளைப் பாடியவன் என்று துணியலாம். நாஞ்சில் வள்ளுவனாக போற்றப்பட்ட நம்பி நெடுஞ்செழியனை, பின்னர் கையறு நிலையில் புலவர் பாடியுள்ளனர்’ (பக்.183).
தமிழ் வளர்த்த திருநெல்வேலிக்கு அருகில், பெருங்குளத்தில் வழுதீசுவரர் கோவில் உள்ளது. அங்கு, திருவள்ளுவருக்கு தவமுனிவர் வடிவில் ஒரு சிலை உள்ளது. அவரே திருவள்ளுவர் என, நூலாசிரியர் கூறுகிறார். திருமூலர் திருமந்திரத்தின் அருமை பெருமைகளை நூலின் முற்பகுதியில் திருக்குறளுடன் ஒப்பிட்டு மிக விரிவாக விளக்கி எழுதியுள்ளது, இந்த வரலாற்று ஆய்வுக்கு, எந்த வகையிலும் தொடர்புடையதாக தெரியவில்லை.
தொல்காப்பியம் காட்டும் சமயக் கொள்கையும், புறநானூறு, கலித்தொகை போன்ற சங்க இலக்கியங்களில் உள்ள, ‘சிவன்’ பற்றிய செய்திகளும், நூலில் விரிவாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. ‘கடவுளைக் காண முயல்கின்றவர்கள் பக்தர்கள் என்றால், கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள்’ என்கிறார் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் (பக்.36). இதுபோல் பல செய்திகள், நூலில் விரவிக் கிடக்கின்றன. ஆய்வு நூலை மிக விரிவாக எழுதியுள்ள ஆசிரியர், ஆங்காங்கே தென்படும் எழுத்துப் பிழைகளை ஆய்ந்து நீக்கியிருந்தால், மேலும் சிறப்பாக இருந்திருக்கும். வரலாறு இல்லாத திருவள்ளுவருக்கு, வரலாறு தேட முயலும் ஆய்வு நூல்.
– முனைவர் மா.கி.ரமணன்