விஜயநகர சாம்ராஜ்யத்தின் மன்னர் கிருஷ்ணதேவராயர் பற்றிய வரலாற்று நூல். மன்னர் வீரநரசிம்மன், தன் தம்பி கிருஷ்ணதேவராயரின் கண்களை குருடாக்கும் படி உத்தரவிட்டதில் துவங்குகிறது இந்த நூல். சுற்றிலும், இஸ்லாமிய மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில், கிருஷ்ண தேவராயர் எதிர்கொண்ட, அவர் தொடுத்த போர்களையும், தந்திரங்களையும் எடுத்துரைக்கிறது. பாமினி சுல்தான்களுக்கு எதிரான, ஒவ்வொரு போரும் விவரிக்கப்பட்டுள்ளது.
கலிங்கம் மீது கிருஷ்ண தேவராயர் போர் தொடுக்க காரணம், ஒரு விக்கிரகம்; கிருஷ்ணதேவராயரின் முகத்தில் அம்மை வடுக்கள் இருக்கும்; திருப்பதிக்கு செல்லும்போதெல்லாம் அவர் அளித்த கொடைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள், இந்த நூலில் நிரம்பி
உள்ளன. கிருஷ்ண தேவராயரின் காலத்தில் தான், தமிழக ஆட்சிமுறை பாளையம், சமஸ்தானம் என்ற பெயரில் மாற்றம் பெற்றது. படைபலம், வணிகம், துறைமுகங்கள், சமூகம் உள்ளிட்ட அனைத்து பகுதியையும் ஆசிரியர் தொட்டிருக்கிறார். ஜாதகம் காரணமாக, துறவி ஒருவரை, ஒரு ஆண்டு மட்டும் ஆட்சியில் அமர்த்தியது; கிருஷ்ண தேவராயரின் இலக்கிய ரசனை; அவரின் இறுதி காலம் என, மாபெரும் மன்னரின் வரலாறு, சுருக்கமாக தரப்பட்டிருக்கிறது.
– சி.கலாதம்பி