‘‘மொழி வழியாக தமிழகம் அமைந்த சூழ்நிலையில், அதன் எல்லைகள் சுருங்கிய நிலை, நதிநீர் சிக்கல், தொன்மையான நம் தமிழ் மொழி தமிழகத்திலும், இந்தியாவிலும் பெற வேண்டிய இடத்தைப் பெறாத நடைமுறை ஆகியன, எனக்குள் ஓர் உறுத்தலாகவே இருக்கின்றன.
‘‘அதனால், என் மாணவ பருவத்தில், நான் ஈடுபாடு கொண்டிருந்த தெற்கெல்லைப் போராட்டத்தை, தமிழுலகிற்கு எடுத்துச் சொல்லுதல் இன்றைய என் கடமையென உணர்ந்தேன். அதுவே இந்நூல்,’’ என்கிறார் நூலாசிரியர்.
அன்றும் சரி, இன்றும் சரி, மலையாளிகளுக்குள் உள்ள ஒற்றுமையுணர்வு தமிழரிடையே இல்லாமல் போனதால், தமிழ்ப் பகுதிகளான நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு, தேவிகுளம், பீர்மேடு, பாலக்காடு, கொல்லங்கோடு வனப்பகுதி போன்றவற்றைப் பறிகொடுத்து நிற்கின்றோம் என்று, வரலாற்று பூர்வமாக சுட்டிக் காட்டுகிறார்.
திருவிதாங்கூர் பகுதிகளை கேரளத்தோடு இணைக்க, ஸ்ரீதரமேனன் செய்த சூழ்ச்சியால், காங்கிரசை விட்டு விலகி தனியொரு மனிதனாக, பி.எஸ்.மணி குரல் கொடுத்து, தமிழர்க்கென ஓர் அரசியல் இயக்கம் தோன்றிய சூழலையும் (14), பின் அது திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ், 1946ல், தி.த.நா.கா., என, பெயர் பெற்றதையும், அதன் போராட்ட களங்களையும் வரிசைப்படுத்தி உள்ளார், தன் அனுபவ முதிர்ச்சியால்.
காங்கிரஸ் என்றுமே தமிழனுக்கு ஆதரவாக இருந்ததில்லை என்பதை, பல இடங்களில் சுட்டும் நூலாசிரியர், ‘ம.பொ.சி., தவிர, காமராஜரோ, பெரியாரோ, தனித் திராவிட நாடு கோரிய தி.மு.க.,வோ யாரும், தெற்கெல்லை போராட்டத்தை ஆதரிக்கவில்லை’ என்றும் ஆதங்கப்பட்டுள்ளார்.
கேரளமும், கர்நாடகமும் உச்ச நீதிமன்றத்தையே மதிக்காத நிலையில், அன்றைய திருவிதாங்கூர் தமிழர் பட்ட அல்லலும், பிறர் மேலாண்மையும், தமிழகம் முழுவதும் பரவும் நிலையை (பக்.316) தடுத்து நிறுத்த, இனியாவது தமிழன் என்ற இன உணர்வோடு தன்னுரிமை பெற வேண்டும் என்ற ஆதங்கம் நம் ஒவ்வொருவருக்கும் ஏற்பட, இந்த நூலை அவசியம் நம் தமிழக தலைவர்கள் படிக்க வேண்டும்; உணர்வுப்பூர்வமான நூலிது.
பின்னலூரான்