படிக்கப் படிக்க மலைப்பைத் தரும் ஒரு பிரமாண்ட தொகுப்பு நூல் இது. புத்தகத்துக்குள் ஓர் அரிய புகைப்பட கண்காட்சி! இந்திய ரயில்வேயின், 100 ஆண்டுக்கால வரலாற்றை, நேர்த்தியாக பதிவு செய்துள்ளார், நூலாசிரியர். அவர், ரயில்வே துறையில் பணியாற்றியவர்.
அப்போதே ரயில்வேயில், வெளிநாட்டு முதலீடு செய்து, கொள்ளை லாபம் ஈட்டிய ஆங்கிலேயரின் வியாபார தந்திரம், அகல பாதை, மீட்டர் பாதை, குறுகிய ரயில் பாதை என, மூன்று விதமாக இருப்பு பாதைகள் அமைத்த ஆங்கிலேயரின் சூட்சுமம் என, எல்லாமே தெளிந்த ஆங்கில நடையில் விவரிக்கப்பட்டு உள்ளன.
அதேநேரம், ஆங்கிலேயர்கள், தம் ராணுவ தேவைகளுக்காக இருப்பு பாதைகளை வடமாநிலங்களில் விரிவுபடுத்தினர் என்பதை, பல்வேறு ஆவணங்கள், தகவல்களின் அடிப்படையில் தந்துள்ளார், நூலாசிரியர். வேறொரு கோணத்தில், ஆங்கிலேயரான டல் ஹவுசியின் தொலைநோக்கு பார்வை, அவரது இருப்புப் பாதை அமைப்பு திட்டங்கள், ரயில் நிலையங்களை நிர்மாணிக்கும் விதம், இருப்புப் பாதைகளை கட்டும் முறைகள் ஆகியவற்றையும், இந்திய ரயில்வேயின் தந்தை என்று போற்றப்படும் ஆர்.எம்.ஸ்டீவென்சனின் உழைப்பையும் பதிவு செய்திருக்கிறார்.
இன்றைய இந்திய ரயில்வேயின் பலவீனமான நிலையையும், பொருளாதார சிக்கல்களையும் நூலாசிரியர் முன்வைக்கிறார்.
நூல் முழுவதும், அரிதான ரயில் நிலையங்கள், பாலங்கள், நடைமேடைகள், சிக்னல்கள் மற்றும் ரயில் தொழிலகங்கள், புராதன சின்னங்கள் என, அரிய 600 புகைப்படங்களை நிரப்பியிருப்பது, மலைப்பை ஏற்படுத்துகிறது.
ரயில்வேயின் வளர்ச்சிக்கான சிற்பிகள் மற்றும் பங்களிப்பாளர்கள் பலரை குறிப்பிட்டு காட்டி கவுரவித்திருக்கிறார்.
தான் பணியாற்றி ஓய்வுபெற்ற ஒரு துறையை பற்றி ஒருவர், தன் 91வது வயதில், இப்படி ஓர் அற்புதமான வரலாற்று நூலை வடித்திருப்பது, ‘நூலை கட்டி மலையை இழுத்திருக்கும் பணி’ எனலாம்.
ஒவ்வொரு பக்கத்திலும், பளிச்சிடும் வண்ணங்களின் தூரத்து பின்னணியில், இன்னொரு அழியாத வண்ணமும் தெரிகிறது. அது, நூலாசிரியர், மிக சிரத்தையோடு, ஈடுபாட்டுடன், நேசத்துடன், பரிவுடன் படரவிட்டிருக்கும் தன் ஆன்மாவின் வண்ணம்; அவ்வளவு நேர்மையான உழைப்பு. நூலாசிரியர் வெங்கடராமன் பாராட்டப்பட வேண்டியவர்.
– கவிஞர் பிரபாகர பாபு