தமிழகம் பரவலாக அறிந்திருக்கும், ‘நீயா நானா’ கோபிநாத்தின், தன்னம்பிக்கை நூல். எளிய உதாரணங்களுடன், வாழ்க்கையை ரசித்து வாழ சொல்கிறார். வெறும் அறிவுரையாக மட்டுமே நீட்டி முழக்காமல், அவ்வப்போது குட்டிக் கதைகள், சின்ன நகைச்சுவைகளுடன் எழுதியிருக்கிறார்.
முதல் பாகமாக வெளிவந்திருக்கும் இந்த நூலில், மொத்தம், 25 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ‘குவளை வேண்டுமா காபி வேண்டுமா’ என்ற கட்டுரையில், ‘ஆசைகள், நம்மை அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்லும் உந்து சக்தியாக உள்ளன. ஆனால், அவை, அர்த்தமுள்ள ஆசைகளா, நம் சொந்த ஆசைகளா, நம் மீது திணிக்கப்பட்டவையா அல்லது வெற்றி அடையும் வெறியை, ஆசை என, அர்த்தப்படுத்தி கொள்கிறோமா?’ என, வினவுகிறார். அது தொடர்பான கதை, அதன் அர்த்தத்தை எளிமையாக புரியவைக்கிறது.
‘மனிதன், தன் பலத்தை மெருகேற்றுவதன் மூலம் தான், வெற்றி பெற முடியுமே அன்றி, பலவீனத்தை பற்றி கவலைப்படுவதால் அல்ல’ என்பது போன்ற, முத்தாய்ப்புகளும் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு கட்டுரையிலும் இடம்பெற்றுள்ள ஓவியர் ஸ்யாமின் ஓவியங்கள், புத்தகத்தின் வடிவமைப்பு பாராட்டுக்குரியவை.
சி.கலா தம்பி