நீங்கள் மாதந்தோறும், 300 ரூபாய் செலவில் புத்தகங்கள் வாங்குகிறீர்கள். அந்த ரசீதை அரசிடம் கொடுத்தால், உங்களுக்குப் பணம் திரும்பக் கிடைத்துவிடும் என்றால் எப்படியிருக்கும்? ஹாலந்து நாட்டின் அரசு ஊழியர்களுக்கு, இப்படியொரு சலுகை வழங்கப்படுகிறது.
தங்கள் நாட்டு மக்கள், படிப்பதில் ஆர்வம் குன்றாதிருக்க, புத்தக பதிப்பாளர்களுக்கு அவற்றை அச்சிட வேண்டிய காகிதத்தை, மிகக் குறைந்த விலைக்கு அளிக்கிறது. புத்தக விலையை ஏற்ற வேண்டிய அவசியமே அங்கு இல்லை.
இப்படி உலகளாவிய ஏராளத் தகவல்களோடு, கம்பர், திருவள்ளுவர், பாரதி, தாகூர், தமிழ்த்தாத்தா, டி.எஸ்.எலியட், சார்லஸ் டிக்கன்ஸ், கலீல் கிப்ரான் என, உலகப் பெரும் இலக்கியவாதிகள் பலரின் வரலாற்றுச் சம்பவங்கள், அவர்களின் படைப்பிலக்கியச் சிறப்புகள் உள்ளிட்ட, 27 கட்டுரைகளின் சுவாரசியமான தொகுப்பு நூல் இது. ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதி, உலக புகழ் பெற்று திகழும் புதுவை பேராசிரியர் ராஜ்ஜா, தன் வாசிப்பு மற்றும் இலக்கிய பயண அனுபவங்களின் பிழிவாக இந்த நூலை உருவாக்கியுள்ளார்.
கவுதம நீலாம்பரன்