‘துவக்க காலத்தில், ‘கடவுள் இல்லை’ என்று நம்பியவன், கால ஓட்டத்தில், ‘கடவுள் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன’ என்று எண்ணி காலத்தை ஓட்டினான். ஆனால் இன்று, கடவுளின் கருணை இல்லாமல், எதுவுமே இல்லை என்று நம்புகிறான். இந்த மூன்றாம் கட்டத்து வாழ்க்கையில் தான், நான் அர்த்தமுள்ள வாழ்வு வாழ்வதாக, ஆத்மார்த்தமான வாழ்வு வாழ்வதாக மனப்பூர்வமாக நம்புகிறேன்’ (பக். 16) – நீதியரசர் மு.கற்பகவிநாயகத்தின் இந்த வாக்குமூலம் தான், பள்ளி இறுதித் தேர்வில் தோல்வியுற்று, காந்தியடிகளின், ‘சத்திய சோதனையால்’ மனமாற்றம் பெற்று, நடிகனென்னும் நிலை, நிலையாமல், உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞராக, நீதியரசராக, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக, அகில இந்திய மின்சார மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைவராக உயர்த்தியது.
எம்.ஜி.ஆரின் பேராதரவும், சாய்பாபாவின் அருளாசிகளும், நீதியரசரின் இவ்வுயர்வுக்கு பெரிதும், என்றும் ஆதாரங்களாய் உள்ளன என்றாலும், அவரின் விடாமுயற்சியும், உழைப்பும், நேர்மையும் மகுடங்களைத் தந்தன.
‘வீழ்வது கேவலம் அல்ல; வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம்; விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல. விழுந்த போதெல்லாம் எழுந்தான் என்பது தான் பெருமை’ என்று கூறும் நீதியரசரின் தீர்ப்புகள் கூட, புரட்சிகரமானவை தான்.
‘எம்.எல்.ஏ., ஒருவருக்கு தண்டனையாக, ‘சத்திய சோதனை’ நூலைப் படிக்கச் சொன்னது, நடிகை ஒருவருக்கு தண்டனையாக, தொண்டு அமைப்பில் ஒருநாள் சேவை செய்ய வைத்தது, கார்களில் கறுப்புக் கண்ணாடி நீக்கப்பட வேண்டும் என்பதற்காக வழங்கிய தீர்ப்பு இப்படி ஏராளம்.
‘கண்களைக் கட்டிக் கொண்டிருக்கும் நீதி தேவதை ஒரு பக்கம்; கருணையைக் கொட்டிக் கொண்டிருக்கும் பகவான் பாபா இன்னொரு பக்கம். இருவரின் இதமான அரவணைப்பில், இந்த நீதியரசரின் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது,’ (பக். 191) எனும் ராணிமைந்தனின் வைர வரிகள், நூலுக்கு மெருகூட்டுகின்றன. முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவரும், கட்டாயம் படிக்க வேண்டிய பண்பாளரின் வரலாறு இது.
பின்னலூரான்