கடந்த, 90 ஆண்டுகளுக்கு முன், தமிழுக்காகவே வாழ்ந்த, பண்டித ம.கோபாலகிருஷ்ண அய்யரின் வாழ்வும், படைப்பும் அற்புதக் களஞ்சியமாக வெளிவந்துள்ளது. ஆங்கிலம், தமிழில் புலமை பெற்ற இவர், சோழவந்தான் அரசஞ்சண்முகனாரிடம் தமிழ் பயின்றார். 18 வயதிலேயே எழுதத் துவங்கினார். திருச்சி லால்குடியில் பிறந்து, வளர்ந்து, தேசியக் கல்லூரியில் பேராசிரியராக உயர்ந்து, மதுரைக் கல்லூரியிலும் பணியாற்றினார். மாணவரையும், படைப்புகளையும் உருவாக்கி தமிழை உயர்த்தினார்.
‘நச்சினார்க்கினியன்’ இதழை நடத்தி, அவருக்கு சிலையையும் அமைத்தார். மதுரைக்கு, வங்காள கவி தாகூர் வந்தபோது, தமிழில் கவிதை பாடி வரவேற்றார். ‘விவேகோதயம்’ எனும் மாத இதழ் நடத்தினார். விவேகானந்தர் பாடல்களை தமிழில் கவியாக்கினார்.
கடந்த, 1907ல், சூரத் காங்கிரஸ் மாநாட்டில் வ.உ.சி., பாரதியாருடன் சென்ற, அனுபவங்களை எழுதினார்.
மகாகவி பாரதியாருக்கு, மதுரையில் பணியாற்றிய காலத்தும், சென்னை ‘சுதேசமித்திரன்’ இதழில் பணியாற்றவும் ம.கோ., பெரிதும் உதவிஉள்ளார்.
‘விவேகோதயம், நச்சினார்க்கினியன்’ இதழ்களின் கட்டுரைகளை, இப்பெருநூலில் தேடி தொகுத்து தந்துள்ள முயற்சி, தமிழின் வளர்ச்சியை அறிய ஆதாரமாய் நிற்கும். பல புதிய செய்திகளைத் தேடித் தொகுத்து உள்ளார். உதாரணத்திற்கு, ‘மூவகை ஈக்கள், ராணி ஈ, சிற்றீக்கள், ஆண் ஈக்கள். ஆண் ஈக்கள் வேலையெல்லாம் சந்ததி உற்பத்தி செய்வது தான். இவை தேனும் சேர்க்காது, வீடும் கட்டாது, மெழுகும் உற்பத்தி செய்யாது. இவைகளுக்கு, ‘சோம்பர்’ என்று பெயர்’ (பக். 281).
ம.கோ.,வின் நடுநிலையான கருத்துக்கள் பல, நூல் முழுவதும் பலராலும் போற்றப்பட்டு எழுதப்பட்டுள்ளன. நக்கீரரில் துவங்கி, கடைச்சங்ககால புலவர் 49 பேரில் 12 பேரும், சமயக்குரவரில் மூவரும், ஆழ்வார்களில் ஏழு பேரும், உரையாசிரியர்கள் பலரும் உ.வே.சா., வரையில் அருந்தமிழுக்கு உழைத்த அந்தணரை (பக். 444) ‘அந்தணரும் செந்தமிழும்’ என்ற கட்டுரையில் விளாசித் தள்ளுகிறார்.
‘மவுன தேசிகர்’ என்ற நகைச்சுவை நாடகம், இறுதியில் சுவைபட தரப்பட்டுள்ளது. மதுரையில், பாண்டித்துரைத் தேவரின் தமிழ்ச்சங்கம் உருவாவதற்கு முன், இவர் செந்தமிழ்ச் சங்கம் நிறுவி தமிழை வளர்த்தார். மதுரையில் தமிழ் வளர்த்த ம.கோ.,வை மீட்டெடுக்கும் மகத்தான தமிழ்க் களஞ்சியம் இந்த நூல்.
மா.கி.ரமணன்