முகவுரை துவங்கி முடிவுரை ஈறாக வழக்கு மட்டுமன்றி, விளையாட்டு போன்ற அனைத்து துறைகளிலும், ‘முன்னிலைப்படுத்தும்’ விஷயங்கள் மட்டுமே, தொடர் முயற்சியால் வெற்றி பெறும் என்பதை, தாம் நடத்தி வெற்றி பெற்ற, ஒரு பொதுநல வழக்கின் மூலம் வழக்கறிஞர்களுக்கும், முன்னேற துடிக்கும் அனைவருக்கும், ‘தொழில் உத்தி’ ஒன்றை பெருஞ்செய்தியாக, இந்த நூலில் தமக்கே உரிய அழகிய, ஆங்கில நடையில் எழுதியுள்ளார், மூத்த வழக்கறிஞர் டாக்டர் ஏ.ஈ.செல்லையா.
சிந்தனை சிற்பி, வழக்கறிஞர், சுதந்திர போராட்ட தியாகி, தொழிற்சங்க தலைவர் போன்ற பல பரிமாணங்களைக் கொண்ட அவர், 20 ஆயிரம் நூல்களைச் சேகரித்தவர், 1923லேயே. ‘மே தினம்’ கொண்டாடிய மேதை மா.வே.சிங்காரவேலரின் சிதிலமடைந்து, கவனிப்பாரற்று கிடந்த சமாதியை புனரமைத்து, அவரது பெருமைகளை மீண்டும் உலகறிய செய்ய, சென்னை உயர் நீதிமன்றத்தில், 2013, ஜூலை 23ல், பொதுநல வழக்கு தொடுத்து, அதற்காக ஆதாரங்களை அரும்பாடுபட்டு திரட்டி, 2014, பிப்., 7ல் வெற்றி பெற்ற வரலாற்று சுருக்கமே இந்த நூல்.
விவேகானந்தர் இல்லம் அருகே, லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில், மீண்டும் நினைவு சின்னம் உருவாக அரும்பாடுபட்ட செல்லையாவுக்கு, தமிழினமும், நாடும் கடமைப்பட்டுள்ளது.
சி.சுப்ரமணியம் எழுதிய, ‘ஹேண்ட் ஆப் டெஸ்டினி’, ம.பொ.சி.,யின், ‘விடுதலைப் போரில் தமிழகம்’, மறை.திருநாவுக்கரசின், ‘மறைமலையடிகள் வரலாறு’, ரஷ்ய வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய, ‘தி ஹிஸ்டரி ஆப் இந்தியா’, அரசியலமைப்பு பற்றி அகர்வால்; பெரியார் பற்றி டாக்டர் இ.சா.விஸ்வநாதன் இப்படி ஏராளமான நூல்களும், இதழ்களும், சுதந்திர போராட்ட தலைர்களின் அஞ்சல் தலைகளும், தமிழக விடுதலை போராட்ட களத்தை மறுவாசிப்பு செய்யுமளவில், ஆவணங்களாக தரப்பட்டு உள்ளன.
மூதறிஞர் ராஜாஜியால், ‘இனிய நண்பரும், சுதந்திர பித்தரும், அரசியலில் யோக்கியருமான சிங்காரவேலர் என்ற மாமனிதர்’ (பக். 216) என்று புகழாரம் சூட்டப்பட்டவரின் பெருமைகளை, மீண்டும் நிலைநாட்ட எடுத்துக் கொண்ட முயற்சிகளின் செயல் வடிவமான இந்த நூல், ஓர் நீதி இலக்கிய வரலாற்றுப் பொக்கிஷம்.
பின்னலூரான்