பாரதி பரம்பரையில், வந்த சிறந்த படைப்பாளர் முருகு சுந்தரம். பழமையில் பூத்து, புதுமையில் கனிந்த முருகுசுந்தரம், மரபில் துவங்கி, புதுக்கவிதையில் உயர்ந்து நின்றார். புதிய உத்திகள், படிமங்களுடன் புதுக்கவிதை யில், நாடகமாக ஈழப் பிரச்னையை, ‘எரி நட்சத்திரம்’ ஆக்கினார். அவர் எழுதிய அருவ ஓவியங்கள், கனிந்த பழம், பொம்மைக் காதல் முதலிய ஆறு புதுக்கவிதை நாடகங்களும், அவருக்கு பெருமை சேர்த்தன.
மறத்தகை மகளிர், பாரும்போரும், பாவேந்தர் நினைவுகள், மலரும் மஞ்சமும் ஆகிய நூல்கள், சிறந்த வரவேற்பை பெற்றன.
குழந்தைகளுக்காக நாட்டுக்கு ஒரு நல்லவர், அண்ணல் இயேசு, பாரதி வந்தார் முதலிய நூல்களை தந்துள்ளார். தன்னை வழிகாட்டி வளர்த்த, பாரதிதாசன் பற்றி, 2007ல், சாகித்ய அகாடமியில் நூல் எழுதினார். திரைத்துரையினர் பேச்சிற்கும், அவரின் வாழ்விற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது; பணம் சேர்ப்பதே அந்த சமூகப் போலிகளின் வேலை என்பதை, தன் கவிதையால் சாடுகிறார் (பக்.24).
– முனைவர். மா.கி.ரமணன்