இந்திய அளவில், மிக பிரபலமான எழுத்தாளர் அஷ்வின் சாங்கியின் வரலாற்று நாவல் இது. சாணக்கியர் காலத்தில் நடந்த நிகழ்வுகளையும், இந்திய சுதந்திரம் கிடைத்த காலகட்ட நிகழ்வுகளையும் கோர்த்து புனைந்துள்ளார். மன்னர் காலத்தில், சாணக்கியர், சந்திரகுப்தன் ஆகியோரும், சுதந்தர இந்திய காலகட்டத்தில், கங்கா சாகர், சாந்தினி ஆகியோரும், கதை மாந்தர்களாக வருகின்றனர்.
விசாகா என்ற பெண், தன் உதட்டில் விஷம் தடவி, பாரஸ் மன்னனுக்கு முத்தம் கொடுத்து கொன்றாள் என்ற, முதல் பக்கத்திலேயே பரபரப்பு தொற்றிக்கொள்கிறது.
புத்தகம் முழுக்க, கதாபாத்திரங்களின் பேச்சுகள், சுவாரசியம் அளிக்கின்றன. இதற்காக, 40க்கும் மேற்பட்ட அறிஞர்களின் கருத்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சாணக்கியரின் அரசியல் தந்திரம், இக்காலத்திற்கும் எப்படி பொருந்துகிறது என, நாவல் முடியும் போது, நம்மை ஆச்சரியம் பற்றிக் கொள்கிறது.
வரலாறும், கற்பனையும் கலந்திருக்கும் நாவலில், இரண்டையும் பிரித்தறிய முடியாத அளவிற்கு எழுதியிப்பது பிரமிக்க வைக்கிறது. மொழிபெயர்ப்பு பாராட்டும் விதத்தில் உள்ளது.
சி.கலாதம்பி