‘ரேடியோவை கண்டுபிடித்தவர் மார்க்கோனி’ என்று பள்ளி பாடங்களில் சொல்லி தந்தது நினைவிருக்கலாம் உங்களுக்கு. உண்மையில் ரேடியோவை கண்டுபிடித்தவர் இந்திய அறிவியல் மேதையான ஜெகதீஷ் சந்திரபோஸ் தான்! வியப்பாக இருக்கிறதல்லவா?
இப்படி பல சுவாரசிய தகவல்களை தன்னுள் பொதித்திருக்கிறது இந்த நூல். 100 அறிஞர்களின் வெற்றிக்கு பின்னாலும், பொதுவான அம்சங்கள் என்ன என்று பார்த்தால், சோதனைகளை கண்டு துவளாமை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை ஆகிய அம்சங்கள் தென்படுகின்றன. படிப்போர் மனதில், ஊக்க சிந்தனைகளை விதைக்கிறது இந்த நூல். அத்தனை அறிஞர்களின் புகைப்படங்களையும் தேடிப் பிடித்து வெளியிட்டிருப்பது, நூலின் சிறப்பு. நிறைய வரிகள் ஒற்றெழுத்தில் துவங்குவதை தவிர்த்திருக்கலாம். சராசரியாக ஒரு அறிஞருக்கு இரண்டு பக்கங்கள் வீதம் தரப்பட்டிருக்கிறது. படிக்கும் போது மேலும், தெரிந்து கொள்ளலாம் என்ற ஆவல் நிச்சயம் எழுகிறது. அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது என, தாராளமாக பரிந்துரைக்கலாம்.
-பாலகணேஷ்