உலா, மடல், பிள்ளைத் தமிழ், குறவஞ்சி, பள்ளு, தூது, பரணி என, தொடரும் 96 வகை சிற்றிலக்கியங்கள் தமிழில் உள்ளன.
அவற்றைப் பிரபந்தம் எனவும் உரைப்பர். அவற்றுள் மிகச்சிறந்த இயற்கைச் செறிவுடைய, உழவர், உழத்தியர் வாழ்வைச் சித்தரிக்கும் நூல், பள்ளு என்பதாம். பள்ளு நூல்களுள், முக்கூடல் பள்ளு மிகச் சிறப்புடையது.
முதற்கட்டுரை, நூலின் தலைப்பாக அமைந்துள்ள இந்த நூலுள், பள்ளு இலக்கியம் பற்றிய ஆய்வுகள், அவை தோன்றிய சமூகப் பின்னணி, நூலுள் காணும் வரலாற்றுச் செய்திகள், பள்ளர்களின் சமூக வாழ்க்கை, பள்ளர்தம் சமய மரபு, அவர்களது பண்பாட்டுக் கூறுகள் என, பல தலைப்புகளில் செய்திகள் விளக்கப்பட்டு உள்ளன.
‘பள்ளுப் பாடுதல்’ என்றாலே குதூகலமான பாட்டு என, அறிவோம். உலா, கலம்பகம், பரணி, அந்தாதி போன்ற நூல்களோடு ஒத்துப் பார்த்தால், பள்ளு பாமர மக்களோடு நெருங்கி நிற்கும். பள்ளும், குறவஞ்சி இலக்கியமும், எளிதில் எவரும் படித்து இன்புறும் இயல்புடையன. மக்களின் உணவு, உடை, தொழில், கடவுள் வழிபாடு, பழக்க வழக்கங்களை அப்படியே படம் பிடித்துக் காட்டுபவை இவை. உழவர்களின் உழைப்பும், பண்ணைக்காரர் இறுமாப்பும், இடைநிற்போர் இயல்புகளும் அருமையாக இடம்பெற்றவை, பள்ளு நூல்கள்.
பள்ளு நூல்கள் எத்தனை உள்ளன, ஒவ்வொன்றின் சிறப்புகள் என்ன, நாட்டுவளம், ஆற்றுநீர்ப் பெருக்கின் அழகு, இயற்கை நல்கும் கோடி வளங்கள், வாழ்க்கைச் சிக்கல்கள், அவற்றிலிருந்து விடுபடும் வித்தகம் அனைத்தும் விளக்கமாகச் சொல்லும் இந்த நூல் அரிய நன்னூலாகும். இலக்கியப் பித்தர்கள் அனைவர் கையிலும் இருக்க வேண்டிய நூல்.
கவிக்கோ ஞானச்செல்வன்