முகப்பு » அரசியல் » ஜெயலலிதா

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு

விலைரூ.140

ஆசிரியர் : கோமல் ஆர்.கே.அன்பரசன்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பகுதி: அரசியல்

ISBN எண்:

Rating

பிடித்தவை
ஆட்டோ ரிக் ஷாவில் போனால் அதிகம் செலவாகும் என்று நினைத்து, சைக்கிள் ரிக் ஷாவில் போவதை வழக்கமாக கொண்டிருந்தார் அந்த பெண்மணி. தென் சென்னை பகுதியில் வீடியோ கேசட்டுகளை வாடகைக்கு கொடுக்கும் கடை வைத்திருந்தார் அவர். கணவரோ அரசு அதிகாரி. அவர்களுக்கு பூர்வீக சொத்தாக, ஐந்து ஏக்கர் நிலம் மட்டுமே இருந்தது. இதெல்லாம், 40 ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம். பெண்மணியின் பெயர் சசிகலா. கணவர் நடராசன். சசிகலாவின் அக்கா மகன் பெயர் சுதாகரன்.
காலப்போக்கில், அ.தி.மு.க., பிரமுகர் ஜெயலலிதாவோடு, சசிகலா நெருக்கமானார்; ஜெயலலிதா, தமிழகத்தின் முதல்வரானார்; சுதாகரன், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் ஆனார்.  
கடந்த, 1995ம் ஆண்டு, செப்., 7ம் தேதி, வளர்ப்பு மகன் திருமணம், ஒரு வரலாற்று திருமணமாக நடந்தது. திருமண அழைப்பிதழோடு பட்டு வேட்டி, பட்டி அங்கவஸ்திரம், பட்டு சேலையும், வெள்ளி தட்டோடு கொடுக்கப்பட்டன.
திருமண நாளில், சென்னை நகரிலுள்ள அனைத்து நட்சத்திர ஓட்டல்களும், திருமணத்திற்காக முடக்கப்பட்டன. தொண்டர்களுக்கு நேரு விளையாட்டு அரங்கில் இடம். ஒரேநேரத்தில், 12,000 பேர் சாப்பிடும் அளவுக்கு, பந்தலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அடையாறு சுந்தர விநாயகர் கோவில் துவங்கி, மணப்பந்தல் இருந்த எம்.ஆர்.சி., நகர் வரை வீதி எங்கும் வாழை மரங்கள்.
சந்தனமர சாரட் வண்டியில், சுதாகரன் ஊர்வலமாக வர, உடன் கரகாட்டம், ஒயிலாட்டம், பாண்டு வாத்தியங்கள் ஒலிக்க, வைர நகைகள் ஜொலிக்க, ஜெயலலிதாவும், சசிகலாவும் வந்தனர். திருமணத்திற்கான செலவு, 75 கோடி ரூபாய். வந்த விருந்தினர்கள் 1,50,000 பேர் என, ‘கின்னஸ்’ அமைப்பு பதிவு செய்து கொண்டது.
ஆனால், இந்த திருமணத்திற்கு முன்பே, 1995, ஏப்.,4ம் தேதியே, தி.மு.க., தலைவர் கருணாநிதி, அப்போதைய கவர்னர், சென்னாரெட்டியை  சந்தித்து, ஆளுங்கட்சி மீதான ஊழல் புகார் அடங்கிய பட்டியலை கொடுத்து விட்டார். அதற்கு முந்தைய மாதத்தில், சுப்பிரமணியன் சாமி புகார் கொடுத்து இருந்தார். அந்த புகார்கள் தான், இன்று பூதாகரமாக உருவெடுத்திருக்கும் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு. இது பற்றிய விவரங்கள் எதையும் சிதறவிடாமல், ஒரு துப்பறியும் நவீனம் போல எழுதியிருக்கிறார், கோமல் அன்பரசன்.
‘ஒரு கட்டத்தில், நமது எம்,ஜி.ஆர்., பத்திரிகைக்கு, சந்தா மூலம் கிடைத்த பணம், 14 கோடி ரூபாய் என்றனர். சந்தா ஆவணங்கள் எங்கே என கேட்ட போது, ‘அவற்றை ஒரு வாகனத்தில் எடுத்து போனோம். வழியில் வண்டியை நிறுத்தி, டீ குடித்தோம். அப்போது, ஆவணங்கள் திருடு போய்விட்டன’ என்றனர். ஆனால், அதே நீதிமன்றத்தில், இன்னொரு கட்டத்தில், அந்த ஆவணங்களை, அவர்களே தாக்கல் செய்தனர். அவை எங்கிருந்து முளைத்தன?’  என்று கேட்கிறார் கோமல் அன்பரசன்.
நம்மை பொருத்தவரை, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி, குமாரசாமியின் தீர்ப்பு எப்படி இருந்தாலும், ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகி விடும்’ என்ற, இளங்கோவடிகளின் தீர்ப்பை நினைவுபடுத்தி கொள்கிறோம்.
சுப்பு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us