இந்து மதம் மிகப் பழமையானது. பல ஆயிரம் ஆண்டு வரலாறு கொண்டது. அதனை அடையாளம் காட்டும் வேத, உபநிடதங்கள், மனிதனின் பிறப்பை அறுத்து, பிறவிப் பெருங்கடலை நீந்தி கடக்க உதவும் கருத்துக் களஞ்சியங்கள். புராணங்கள், மனிதகுல வாழ்வையும், அதில் காணப்படும் செழுமைகளையும் குறிப்பவை.
காலப்போக்கில், அவை தவறாக சித்தரிக்கப்படும் கருத்துக்களாக மாறியது உண்டு. ஆயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்ட நாட்டில், புராணங்கள் தொடர்ந்து, செவிவழியாக நிலைத்து நிற்பது அதிசயம். உணவுப் பழக்கங்கள், 200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தது போல இன்று இருந்தால், இன்று யார், ‘பர்கரையும், கேக்குகளையும்’ விரும்புவர்?
அதுபோல, புராணங்கள் பேசப்படும் காலம், மக்கள் எண்ணிக்கை மிகவும் சுருக்கமாக இருந்த காலம். அதனால், அதில் இனப்பெருக்கத்திற்கு காட்டப்படும் வழிகள், இன்று பொருந்தாததாக இருக்கலாம்.
ஆனால், அடாது செய்பவர் படாதுபடுவர், தவறிழைப்போருக்கு தர்மம் கூற்றாக மாறும் என்ற கருத்துகள், இன்றும் அறிவியல் பார்வையில் ஏற்கப்படுகின்றன.
அந்த வகையில், மகாவிஷ்ணுவின் கதை மற்றும் சிறந்த தகவல்கள் பலவற்றைக் கதை அம்சங்களுடன் கொண்ட இந்த புராணத்தை, மிகப் பெரும் முயற்சியுடன் ஆசிரியர், தமிழில் உருவாக்கியது நல்ல முயற்சி. அதனால் சில எழுத்துப் பிழைகளை கவனிக்க வேண்டியதில்லை.
வேதத்தின் சிறப்பை விளக்கும் பூதக்கண்ணாடி இந்த புராணம் என்ற கருத்து, ஆசிரியர் மனதில் ஆழங்கால் பட்டதால், இதற்கு தமிழ் வடிவம் தந்திருக்கிறார்.
இருந்தபோதும், தற்போதைய அவசர உலகிற்கு ஏற்ப உலகம் உருவான விதம், பல்வேறு ரிஷிகள், நரகம் பற்றிய தகவல்கள் ஆகியவற்றை சற்று சுருக்கி இருந்தால், மனித குலம் என்பது இறையைத் தேடி, முடிவில் பிறப்பறுக்கும் பெருமானை அடைய உதவும் தர்மத்தின் வழி மிகப்பெரியது என்பதை, வாசகர்கள் எளிதில் அறிய உதவியிருக்கும். அதன் அறிவியல் தத்துவங்களையும், எளிதில் அசைபோட உதவியிருக்கும்.
இருந்த போதும், தமிழில் புராண நூலை உருவாக்கி இந்திரன் முதல் கிருஷ்ணன் வரை பலரை உலவவிட்ட இந்த நூலின் சிறப்பு, பாராட்டுதற்குரியது.
எம்.ஆர்.ஆர்.