விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயர் இயற்றிய, ‘ஆமுக்த மால்யத’ என்ற தெலுங்கு மொழிப் பெருங்காப்பியத்தை, தமிழில் மொழிபெயர்த்துள்ளார் நூலாசிரியர். ‘ஆமுக்த மால்யத’ என்பதற்குச் ‘சூடிக் கொடுத்தவள்’ என்பதே பொருள். செய்யுள் நூலை, எளிய நடையில் தமிழில் உரைநடையாகத் தந்துள்ள முறை சிறப்பாய் உள்ளது.
ஏழு இயல்களாக அமைந்துள்ள நூலில், பெரியாழ்வார் ஆகிய விஷ்ணு சித்தரின் வரலாறும், சூடிக் கொடுத்தவளான ஆண்டாளின் வரலாறும் அமைந்து, ஒருவரே இயற்றிய இரட்டைக் காப்பியம் எனுமாறு அமைந்துள்ளது. வைணவர்களுக்குப் படிக்கப் படிக்கத் திகட்டாத அமுதமெனத் திகழ்கிறது இந்த நூல்.
ஆளவந்தார், சேனை முதலியார், ராமானுஜர் முதலியோர் வரலாறு போற்றப் பெற்றுள்ளது. பாண்டியனின் பண்பு நலன்கள், வீரசைவ நெறிகள், தசாவதாரக் கதைகள், துரோணர் – துருபதன் மனவேறுபாட்டு நிகழ்ச்சி சிறப்புடன் எழுதப் பெற்றுள்ளன.
‘தேவர்களைப் பூசிப்பதைக் காட்டிலும், மறைந்து போன பெற்றோரைப் பூசிக்கும் நீர்க்கடன் வழிபாடே சிறந்ததாகும்’ என்பது போன்ற கருத்துகள் போற்றுதற்குரியவை.
பேரா.ம.நா.சந்தான கிருஷ்ணன்