சென்னை மாநகருக்கு வடக்கே, 10 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ள திருவொற்றியூர், மிக மிகப் பழமையான திருத்தலம். பட்டினத்தார் இந்த ஊர் கடற்கரையில் ஜீவசமாதி ஆகியுள்ளார். ராமலிங்க சுவாமிகள், 23 ஆண்டுகள் தொடர்ந்து இந்த ஊர் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்திருக்கிறார்.
‘சங்கீத ஞானி’ என்று போற்றப்படும் தியாகராஜ சுவாமிகள், வடிவுடையம்மன் மீது பஞ்சரத்னக் கீர்த்தனைகள் பாடியிருக்கிறார். சுந்தரர் சங்கிலி நாச்சியாரை, சிவபெருமான் சாட்சியாக இக்கோவிலில் இருந்த மகிழ மரத்தடியில் தான் திருமணம் செய்து கொண்டார். கம்பர் இரவில் தமிழில் ராமாயணம் எழுத, வட்டப்பாறை காளியம்மன் பெண் வடிவில் வந்து தீப்பந்தம் ஏந்தி ஒளி தந்து நின்றதைக் கம்பரே பாடியுள்ளார். வடமொழி இலக்கணத்தின் மிக முக்கியமான நூலான, ‘பாணினி வியாகரணம்’, இந்த ஊர் கோவிலில் உள்ள ஒரு மண்டபத்தில் தான் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
ஒரு தலபுராணம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்வது இந்த நூல்.
- கே.சி