நவீன தமிழிலக்கியத்தில், பயண நூல்களை எழுதிய முன்னோடி எழுத்தாளரான ஏ.கே.செட்டியார், 1937 மற்றும் 1939ல் தாம் மேற்கொண்ட கப்பல் பயணங்கள் மூலம் கண்டுகளித்த, ஜப்பான், அமெரிக்கா, அயர்லாந்து, பாரிஸ், டென்மார்க், ஜெர்மன், இத்தாலி, தென்னாப்ரிக்க நாடுகளைப் பற்றிச் சுருக்கமாக எழுதிய பயணக் குறிப்புகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.
காந்தியடிகளுக்கு உலக நாடுகளில் உள்ள பெருமைகளை, விளக்குகிறது முதல் கட்டுரை. ‘பீனிக்ஸ் பூங்கா’ அயர்லாந்தில் மட்டுமல்ல, ஐரோப்பாவிலேயே மிகவும் பெரிய பூங்கா (பக். 28). பிரெஞ்சுக்காரர்கள் பிறரை எப்போதும் சமத்துவமாகவும், அன்பாகவும் நடத்துவர் (பக்.37). ஜெர்மனியில் வாழும் தமிழ்ப்புலவர் பைதான் சாஸ்திரி, சீர்காழி ஸ்ரீமான் ப.அ.முத்துத்தாண்டவராய பிள்ளையிடம் பாடங்கேட்டவர் (பக்.56). ‘ஐரோப்பாவில் ஏற்படும் சிக்கல்களை ஒழுங்குபடுத்துவோர் ஆங்கிலேயர்கள். அதனால் தான் அவர்களுக்கு இந்தக் காரணப் பெயர் (ஸ்க்ரூ டிரைவர்) வந்தது’ (பக்.60), இப்படி சுவாரஸ்யமான தகவல்கள் இந்த நூலில் உள்ளன.
-
பின்னலூரான்