இந்த நூலில், மொத்தம் 15 கதைகள் உள்ளன. முதற்கதையான, ‘ஓடும் நதி’, வட்டார வழக்கில் அமைந்து, மனிதம், வற்றாத நதி என்பதைக் காட்டுகிறது. இந்தோனேஷிய தீவில் இந்தியப் பெண்ணின் தாய்மை ஏக்கம் காட்டும் ‘அழுக்கு’; திருட்டுக் கொடுத்தவன் தூக்கத்தையும், நிம்மதியையும் தொலைத்து நிற்பதைக் காட்டும் ‘இனி’; நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் ‘கடவுள்’; உதவியின் பலம் சுட்டும் ‘மாணப் பெரிது’; நடப்பியலை நகைச்சுவையுடன் வெளிப்படுத்தும் ‘மனம்’ என, அனைத்துக் கதைகளும் வாசகர் நெஞ்சத்தை ஈர்த்து, மனித மேம்பாட்டை வலியுறுத்துவனவாக அமைகின்றன.
அனைத்துக் கதைகளுக்கும் சிகரமாய் அமையும், ‘இருபத்து நான்காம் தேதி’ எனும் கதை, கல்தச்சனின் இயல்பான வாழ்க்கையை எளிய வார்த்தைகளால் காட்டி, படிப்பவர் நெஞ்சில் பசுமையாய் பதிந்து விடுகிறது.
எளிய நடையில், தெளிவான கதைப் பின்னலோடு, சமூக அக்கறையுடன் கூடிய முடிவினவாகப் புனையப்பட்டுள்ள இந்த கதைகளின் வழியாக, நூல் ஆசிரியரின் தலைப்பிடும் நேர்த்தி, கற்பனை வளம், நகைச்சுவை உணர்வு, நாட்டுப்பற்றுாட்டல் முதலிய திறன்கள் புலப்படுகின்றன.
ந.ஆவுடையப்பன்