பொதுவாக, 20 பக்கங்கள் எழுதி, அதன் மூலம் புரிய வைக்கக்கூடிய ஒரு கருத்தை, இரண்டே பக்கங்களில் மிக அழகாகப் புரிய வைக்க கதைகள் உதவும். அதைத்தான், நூலாசிரியர், இந்தப் புத்தகத்தில் செய்துள்ளார்.
‘கல்கண்டு’ வார இதழில் தொடராக வெளிவந்து, தற்போது குமுதம் பு(து)த்தகத்தால் நூலாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. முல்லா நஸ்ருதீன் கதை, தெனாலிராமன் கதை, பீர்பால் கதை என, பல்வேறு கதைகளைப் படித்து மகிழ்ந்த தமிழர்களுக்கு, நூலாசிரியரின் இந்தக் கதைகள், நிச்சயம் வித்தியாசமானதாக இருக்கும்.
இந்த கதைகளை குழந்தைகளிடம் சொல்வதற்கு, பெற்றோர் பயன்படுத்தலாம்; மாணவர்களுக்குப் புரிய வைக்க, ஆசிரியர்கள் பயன்படுத்தலாம்; மேடைகளில் பேசுவதற்கு, பேச்சாளர்கள் பயன்படுத்தலாம். ‘கதை என்பது ஒரு பாசிட்டிவான விதை. உங்கள் கருத்துக்களை எங்கெல்லாம் தெளிவாக, ஆழமாக முன்வைக்க விரும்புகிறீர்களோ, அங்கெல்லாம் இந்த விதையைப் பயன்படுத்தி வெற்றி பெறலாம். இந்த நூலில் உள்ள கதைகள், நிச்சயம் உங்கள் உள் உணர்வைத் தட்டி எழுப்பும்; மாற்று திசையில் சிந்திக்க தூண்டும்’ என்கிறார், நூலாசிரியர்.