‘குடகு’ என்பதை வலமிருந்து படித்தாலும், இடமிருந்து படித்தாலும், ‘குடகு’ தான் எனும் அழகு தமிழில் துவங்கி, ‘அந்த நாட்டில் பிச்சைக்காரர்களே இல்லை’ (பக்.159) எனும் அதிசயத்தோடு முடியும் இந்த நூலில், 1959ல், சென்னையில் இருந்து, பெங்களூர், மைசூர் வழியாக, குடகு சென்று அங்கு தலைக் காவேரி அடைந்து அதன் புனிதத்தையும், சிறப்பையும் விளக்கி,
குடகர்களின் மரபு, சடங்கு இவற்றை விளக்கி, குடகு மைந்தன் ஜெனரல் கே.எம்.கரியப்பாவுடன் உரையாடிய நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
‘மாதுரு பக்தி, பிதுர் பக்தி, குருபக்தி, தெய்வ பக்தி, இதுவே நமது பண்பாடு. இதை மறந்தால் நம் நாட்டின் மேன்மை குறையும்’ (பக்.56) எனும் கரியப்பாவின் இயல்புகளையும் கூறும் இந்த நூலில், ‘காவேரியும் காப்பியும் தற்காலத் தமிழர்களின் இரு கண்கள். இரண்டும் உற்பத்தியாவது குடகில் தான்’ (பக்.91). ‘ஆண்கள் போர்க்களத்தில் சாக வேண்டும். பெண் பிள்ளைப் பேற்றில் சாக வேண்டும்’ (பக்.100) என்ற குடகர் பழமொழி உட்பட இலக்கியச் சுவை பின்னிப் பிணைந்த பயண நூல் இது.
பின்னலூரான்