ஐம்பெருங்காப்பியங்களில், பலரும் விரும்பிப் படிப்பது சிலப்பதிகாரம். வரலாற்றுக் காப்பியம், புரட்சிக் காப்பியம், புதுமைக்-காப்பியம் என்றெல்லாம், பலரும் அந்த காப்பியத்தை பாராட்டி உள்ளனர். அந்த காப்பியத்தின் தலைவி கண்ணகியை, தெய்வமாக வழிபடும் வழக்கம், அது தொடர்பான பல்வேறு தகவல்களின் தொகுப்பாக, இந்த நூல் விளங்குகிறது.
சைவ சமயத்தை புனருத்தாரணம் செய்த, யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர், சிறுதெய்வ வழிபாடுகளை, கடுமையாக கண்டித்தவர். இலங்கையில் நிலவி வரும் கண்ணகி வழிபாட்டை அவர் கண்டித்துள்ளார். கண்ணகியை, ‘சமண மதத்து செட்டிச்சி’ என்றும், ‘அவளை ஏன் வழிபடுகிறீர்கள்?’ என்றும் ஆறுமுக நாவலர் கேள்வி எழுப்பி உள்ளார். (பக். 6), இளங்கோவுக்கு அரசுரிமை என்று நிமித்திகன் (சோதிடன்) சொன்னதாக சிலம்பில் வந்த செய்தியை, குறத்தி ஒருவர் சொல்வதாக, எழுத்தாளர் கா.நா.சு., எழுதி உள்ளார். (பக். 55),
கல்விக்குக் கலைமகள், செல்வத்திற்குத் திருமகள், வீரத்திற்குக் கொற்றவை என, தெய்வங்கள் இருப்பது போல, கற்பு நெறிக்கு ஒரு தெய்வம் உண்டா என்ற வினாவிற்கு, வடநூலார், அருந்ததியை சுட்டிக் காட்டினர். ஆனால், இளங்கோவடிகள், ‘அங்கண் உலகுக்கு அருந்ததிபோல, இங்கண் உலகுக்குக் கண்ணகி’ என்று குறிப்பிடுகிறார். (பக். 79) ‘கெடுக என் ஆயுள்’ என்று கூறி, மதுரை பாண்டிய மன்னன், தனக்கு எதிராகத் தானே தந்து கொண்ட தீர்ப்பாக, – ம.பொ.சி., குறிப்பிடுகிறார் (பக். 85), என்பது போன்ற செய்திகள் சுவாரசியமானவை. இலங்கையில் கண்ணகி அம்மன் வழிபாடு உள்ள பல இடங்களையும், தமிழகத்தில், அந்த வழிபாடு நடைபெறும் சில இடங்களையும் தொகுப்பாசிரியர் தக்க புகைப்படச் சான்றுகளுடன் விளக்கி உள்ளார்.
‘ஒரு மாமணியாய் உலகுக்கு ஓங்கிய திருமாமணி’ என்று இளங்கோ-வடிகள் போற்றும் கண்ணகி, தமிழகத்தில், பரவலாக தெய்வ நிலையில் வழிபடப்படவில்லை என்பது, தொகுப்பாசிரியரின் ஆதங்கம். (பக். 78) பத்தினி தெய்வம் பற்றிய தகவல்களின் தொகுப்பு இந்த நூல்.
டாக்டர் கலியன் சம்பத்து