செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக் கோள் அனுப்பும் அளவுக்கு, இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சி பெற்ற நிலையிலும், மனிதனின் மலத்தை மனிதனே அள்ளும் கொடுமைக்கு, இந்த நொடி வரை விடிவில்லை. அந்த எளிய மனிதர்களின் வாழ்க்கையை பதிவு செய்கிறது, இந்த நூல். பொருளாதார சமூகத்தில், விளிம்பு நிலையில் வாழும் மலம் அள்ளும் மனிதர்கள், தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அதற்கான நிர்ப்பந்தம், அந்த தொழிலில் இருந்து, வேறு தொழிலுக்கு செல்ல முடியாதவாறு அமைக்கப்பட்டுள்ள சமூக கட்டமைப்பு, அரசின் மறைமுக ஆதரவு என, பல்வேறு கோணங்களில், அவர்களின் வாழ்வு, கட்டுரையாக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர் பாஷா சிங், நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று, கள ஆய்வு செய்து எழுதி இருப்பதால், ஒவ்வொரு வார்த்தையிலும் நம்பகத்தன்மை இருப்பதை உணர முடிகிறது.
அவர்கள், தங்களின் மீட்பர்களாக நினைக்கும் எவரும், மனமுவந்து உதவ முன்வராததையும் அவர், குறிப்பிட தவறவில்லை.
இந்த பிரச்னையை கையில் எடுத்து, ஆத்மார்த்தமாக போராட எந்த கட்சி யும் தயாரில்லை என்பதையும், நூல் அழுத்திச் சொல்கிறது.
மலம் அள்ளும் மனிதர்களை மீண்டும், அதே தொழில் செய்யும் வகையில் அரசே செயல்படுவது தான், குற்றத்திலும் மாபெரும் குற்றம் என்பதை, இந்த நூல் நிறுவுகிறது.
முழுக்க வாசித்து முடித்த பிறகு, நெஞ்சை அழுத்தும் குற்ற உணர்ச்சி அடிமனதில் இருந்து எழுகிறது. அதுவே இதன் முதல் வெற்றி. சமூக ஆய்வுகளில் ஈடுபடுவோர், கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் இது.