‘வழக்குரைஞர் ச.ந.ச.மார்த்தாண்டன், வள்ளுவரை ஒரு புரட்சியாளர் என்று மட்டும் சொல்வதில் மனநிறைவு பெறாமல், அவரை ஒரு கலகக்காரர் என்று சொல்ல முற்பட்டுள்ளார்’ என்று அணிந்துரையில் பொறியாளர் க.சி.அகமுடைநம்பி குறிப்பிட்டுள்ளார். திருவள்ளுவர், பிறப்பால் ஜாதி ஏற்றத் தாழ்வுகளை ஏற்கவில்லை. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்றார். அந்தணர் எனப்படுவோர் பிராமணர் ஆவார்; எல்லா உயிர்க்கும் கருணை காட்டும் அறத்தோர் ஆவார் என, திருவள்ளுவர் புரட்சி செய்தார் என்பது முதற்படி. பரத்தையர் ஒழுக்கம் இருந்த பழந்தமிழ் நாட்டில், அந்த வழக்கத்தைச் சாடிய கலகக்குரல், திருவள்ளுவரின் குறள் என்றும், ஊழ் எனும் விதி நம்பிக்கையுடைய மக்களிடையே, விதியை வெல்ல முடியும், ‘ஊழையும் உப்பக்கம் காண்பர்’ எனக் கலகம் செய்தவர் என்றும், மதுவை ஒழித்திட புரட்சிக்குரல் கொடுத்தவர் என்றும், அடுத்தடுத்த பலபடி நிலைகளில் திருவள்ளுவர் செய்த புதுமைகளைக் கலகக் குரலாகக் காட்டுகிறார் ஆசிரியர். நூலின் தனித்தமிழ் நடை சிறப்பு. மறுப்புக் கருத்துகளுக்கு இடம் தரும் செய்திகளைக் கொண்ட இந்த நூல் ஆய்வாளர்களின் சிந்தனைக்கு விருந்து.
– கவிக்கோ ஞானச்செல்வன்