தமிழ் மொழியில் சொற்கள் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என, நான்கு வகைப்படும். ‘அவன் பார்த்தான்’ என்ற சொற்றொடரில், ‘ஐ’ என்ற வேற்றுமை உருபினைச் சேர்த்து, ‘அவனைப் பார்த்தான்’ என, எழுதினால் பொருள் வேறுபடுவதை உணரலாம்.
பொருளை வேறுபடுத்துவதால், அவற்றிற்கு வேற்றுமை என, பெயரமைந்தது. ஆங்கிலத்தில் சொல்லின் முன்னால் வரும் உருபுகள், தமிழில் சொல்லின் பின்னால் வருவதால், பின்னுருபுகள் எனப்பட்டன. வேற்றுமை உருபு, சொல்லுருபு, பின்னுருபு என்பனவற்றை ஆசிரியர் விளக்கி உள்ளார்.
தமிழில் வரும் பின்னுருபுகளைப் பட்டியலிட்டு, அவற்றுக்கு இணையான ஆங்கிலச் சொற்களை அகராதி போலப் பட்டியலிட்டுள்ளமை நன்று. கால்டுவெல், தேவநேயப் பாவாணர் முதலிய தமிழறிஞர்களின் கருத்துக்களை மேற்கோள்களாகக் காட்டியுள்ளார். ‘இவைகள் அனைத்தும்’ என்பதை ‘இவை அனைத்தும்’ என்றே எழுதியிருக்கலாம். தமிழ் இலக்கணம் பயிற்றுவிப்போர்க்கு இந்த நூல் துணைபுரியும்.
– பேரா.ம.நா.சந்தான கிருஷ்ணன்