சிவகங்கையின் இரண்டாவது அரசர் முத்து வடுகநாத தேவர், நீதிக்குப் புறம்பாகக் காளையார் கோவிலில், ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டார். அந்த படுகொலையில், அவரது மனைவி கவுரி நாச்சியாரும் உயிரிழந்தார். மற்றொரு மனைவியான ராணி வேலு நாச்சியார், தன் மகள் வெள்ளச்சி நாச்சியாருடன் கொல்லங்குடி காளி கோவிலில் இருந்ததால் உயிர் தப்பி, வெள்ளையரின் ஆதிக்கத்திலிருந்து சிவகங்கையை மீட்க, ஐதர் அலியின் படை உதவியுடன் போரிட்டது வீர வரலாறு.
அப்படி மீட்கப்பெற்ற ஆட்சி, வெள்ளச்சி நாச்சியாருடன் முடிவுற்றது. அதன்பிறகு, முத்துவடுகநாத தேவரின் தத்துப் புத்திரனான படமாத்தூர் கவுரி வல்லபத்தேவர், ‘இஸ்திமிரார்’ எனும் பட்டப்பெயருடன் சிவகங்கை அரசரானார். படமாத்தூர் பாளையத்தில், பல குழப்பங்கள் நிலவின.
இந்தக் காலக்கட்ட அரசியல் சூழலையும், ஆங்கிலேயருடனான கடிதப் போக்குவரத்துக்களையும், வழக்கு வியாஜ்யங்களையும் தகுந்த ஆதாரங்களுடன் விவரிப்பதோடு, 200க்கும் மேற்பட்ட அந்தக் கால மூல ஆவணங்களை அப்படியே தமிழில் மொழிபெயர்த்து இடம்பெறச் செய்துள்ளனர். கடின முயற்சி, நேர்த்தியான மொழிபெயர்ப்பு. 18ம் நூற்றாண்டின் தமிழக வரலாற்றையே வாசித்தறிய உதவும் நூல் இது.
கவுதம நீலாம்பரன்