அவ்வையாரின் ஆத்திசூடியில், 77 முதல், 109 வரை, 33 தலைப்புகளில், முக்கனிச் சுவையில் கதைகளைச் சொல்கிறார் ஆசிரியர். பள்ளியில் தலைமை ஆசிரியராகவும், இணையதளங்களில் எழுதுபவராகவும் இருந்த அனுபவத்தால், வார்த்தைப் பூக்களைத் துாவி, வசந்த கால அனுபவமாக கதை சொல்கிறார். ஒரு கதையில், ராமலிங்க அடிகளாரின் தாயார், ‘மருதம்மை’ என்று தவறாக தரப்பட்டுள்ளது. அவரது உண்மையான பெயர், ‘சின்னம்மையார்’ அடிகளார் பிறந்த ஊர் மருதுார்; அடுத்த பதிப்பில் திருத்தி வெளியிட வேண்டும்.
ஒவ்வொரு கதைக்கும், பொருத்தமான படங்கள் ஒரு பக்கத்தில் போடப்பட்டிருப்பது, படிக்கும் சிறுவர்களின் மனதில் பதிய வைக்கும் உத்தி. ஆத்திசூடியின் ஆங்கில மொழி பெயர்ப்பு, பின்னால் தரப்பட்டுள்ளது. இவை, இக்கால ஆங்கில வழியில் பயில்வோருக்கு பயன் தரும். ‘செஸ்’ விளையாட்டிற்கு முன்னோடியாக, பரமபத விளையாட்டு பற்றிய விளக்கம் பயனுள்ளது. பாவம் செய்தால் பாம்பு இறக்கிவிடும்; புண்ணியம் செய்தவரை ஏணி ஏற்றிவிடும் என்பதைக் காட்டுகிறது.
‘ஆடுபுலி ஆட்டம்’ பற்றி முடிவாக குழந்தைகளுக்கு விளக்கம் கூறியுள்ளார்.
ஆத்திசூடியை விளக்கும் சின்னச்சிறு கதை நூல்!
முனைவர் மா.கி.ரமணன்