பொதிகையும், பொருநையும் பாண்டிய நாட்டு இலக்கியங்களால் பின்னி பிணைக்கப்பட்டவை. தமிழும், அகத்தியரும் பின்னிக் கொண்டிருக்கும் புராண நயங்கள். இவற்றை எல்லாம் தன்னகத்தே கொண்டிருப்பது, தூத்துக்குடியை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம்.
அந்த மண்ணின் மகிமையையும், மண்ணின் மைந்தர்களையும், அங்கு அவதரித்த மகா புருஷர்களையும் பற்றிய, அரிய தகவல்களை அள்ளித்தரும் ஆவணமாக விளங்குகிறது இந்த நூல். காவிரியையும் வைகையையும் பொதிகையையும் கொற்கையையும் பாடிய சங்கப் புலவர்கள், ‘பொருநை’ என்று போற்றப்படும் தாமிரபரணி, பாபநாசம், குற்றாலத்திலுள்ள அழகிய அருவிகள் பற்றி ஏனோ பாடவில்லை என்ற ஆதங்கம், இந்த நூலுள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், திருஞானசம்பந்தர் தமது, ‘திருக்குறும்பலா’ பதிகத்தில், குற்றால அருவியை குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொருநை நீரைக் குடித்தோருக்கு கல்வி உணர்ச்சி அதிகம் என்பதாலேயே, ‘திரைபடு பொருநை நீத்தம் செவிலி போல் வளர்க்கும்’ என, பரஞ்சோதி முனிவர் பாடுகிறார். மவுனிகளாய் வாழத் துவங்கி, அருள்ஞானிகளாகப் புகழ் பெற்ற குமரகுருபரர், நம்மாழ்வார் போன்றோரும், வில்லிபுத்தூரார், பரிமேலழகர் ஆகியோரும் அவதரித்த புண்ணிய பூமி.
கிறிஸ்துவத்திற்கு ரட்சணிய யாத்திரிகத்தையும், இஸ்லாமிற்கு சீறாப் புராணத்தையும் தந்த பூமி. விடுதலைக்கு வித்திட்ட வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., ஆகியோரின் தியாகங்களின் வலிகள், நெடிதாக இந்த நூலுள் விளக்கப்பட்டுள்ளன.
‘தாமிரபரணி நதி எப்போதும் வற்றாது’ என்பது சம்பிரதாயம். அந்த சம்பிரதாயத்திற்குப் பங்கம், இந்த கலிகாலத்தில் வந்துவிடுமோ என்று பயந்து, முனிசிபல் உபநதிகள் பல வந்து சேர்கின்றன என, சமுதாய அவலங்களைக் கேலியும், கிண்டலுமாக விமர்சிக்கும் புதுமைப்பித்தனின் சிறுகதைகளும், கவிதைகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
‘தாமிரபரணி, தூத்துக்குடி’ எனும் சொற்களின் சொல் ஆராய்ச்சியும் இடம்பெற தவறவில்லை. அதிவீரராம பாண்டியர், மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை, மாதவையா, பெ.நா.அப்புசுவாமி, கால்டுவெல், ஜி.யு.போப் என, அந்த மண்ணின் மைந்தர்கள், மண்ணோடு தொடர்புடையவர்கள், நிகழ்ந்த நிகழ்வுகள், முகிழ்த்த இலக்கியங்கள் என, எந்தத் தகவலும் விடுபடக் கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளார் நூலாசிரியர்.
புலவர் சு.மதியழகன்