தமிழ்த்தென்றல், திரு.வி.க., வழியைப் பின்பற்றி வாழ்ந்தவர்; டாக்டர் மு.வ.,வின் நன்மாணாக்கர்; ‘சன்மார்க்க சீலர்’ என்று போற்றப்பட்டவர். சுப.அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறும், தமிழ்ப் பணிகளும், ஆன்மிகப் பணிகளும், இலக்கியப் பணியும் சுருக்கமாக, அழுத்தமாக இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வள்ளலாரின் சமரச சன்மார்க்க நெறியில் தோய்ந்து நின்றவர்; ‘வள்ளலாரின் வாழ்வும் வாக்கும்’ எனும் ஆங்கில நூலும் எழுதிப் பெருமை பெற்றவர். உரையாசிரியராக ஆற்றிய பணிகளும், திருவாசகத்தில் திளைத்த நிலையும், திருக்குறள் சிந்தனைகள் வளர்த்த பாங்கும், காப்பியங்களில் கனிந்த மனமும், வள்ளலார் வழியில் பயணமும், உருவும் உணர்வும் ஒன்றியவராக வாழ்ந்த வாழ்க்கையும் நூலில் இடம்பெற்றுள்ளன.
பேராசிரியர் டாக்டர் சுப.அண்ணாமலை எழுதிய நூல்களின் பட்டியலும், அவர்தம் வெளிநாட்டுப் பயணங்களும் இடம்பெற்ற நூல் இது. ஒரு நல்ல தமிழறிஞரை அறியத்தக்க சிறந்த நூல் இது.
கவிக்கோ ஞானச்செல்வன்