முகப்பு » கதைகள் » தலித் சிறுகதைத்

தலித் சிறுகதைத் தொகுப்பு

விலைரூ.245

ஆசிரியர் : ப.சிவகாமி

வெளியீடு: சாகித்ய அகடமி

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
தலித் இலக்கியப் பங்களிப்பு, தமிழ் இலக்கியத்தில் கவனத்திற்குரியதாகிறது. தலித் படைப்பாளிகள், தங்கள் சமூகத்திற்குரிய சிக்கல்களை அணுகியிருப்பதோடு,  இலக்கியத்தில் தங்களுக்கான இடம் எது என்பதையும் மெய்ப்பித்து வருகின்றனர்.
இதில், மொத்தம் 26 கதைகள் உள்ளன. தலித் மக்கள், ஆதிக்க வர்க்கத்தால் எவ்வாறெல்லாம்  பாதிப்புக்குள்ளாகின்றனர் என்பதையும், சமூக தளத்தில் மட்டுமின்றி, அலுவலகங்களிலும் அவர்களுக்கான அடையாளங்களும், அங்கீகரிப்பும் எப்படி  மறுக்கப்படுகின்றன என்பதையும், இதில் உள்ள பல கதைகள் தோலுரித்துக்  காட்டுகின்றன.
ஜாதிச் சான்றிதழ் வாங்கக் கூட முடியாமல் அதிகாரிகளால் அல்லல்படுவதை, ‘ஆதாரம், சர்ட்டிபிகேட்’ ஆகிய இரு  கதைகளும் உணர்த்துகின்றன. குடியால் குடும்பம் சீரழிவதோடு, கணவனிடமே தகாத  பேச்சுக்கு இடமாவதையும், நாட்டாண்மையால் ஏற்படும் வன்முறையையும், ‘பள்ளத்தெரு’ என்ற கதை விவரிக்கிறது. ‘குதிரில் இறங்கும் இருள்’ என்ற கதையில், கணவனை இழந்து ஒண்டிக்கட்டையாக வாழும் ராசாத்தி, தன் மகளை முன்னேற்றுவதற்கான முயற்சியில் படும் அவலம் தொனிக்கிறது. அலுவலகப் பணி  தொடர்பாக வெளிமாநிலம் சென்று தங்கியபோது, தனக்கு ஏற்படும் அனுபவங்களை விவரிக்கிறது, ‘சிவகாமியின் அரிய மலர்’ என்ற கதை.
நேர்ந்துகொண்டதற்காக ஆதிக்கக்காரர்களின் கோவிலில் ஆட்டை விட முடியாமல் தவிப்பதை, ‘போ’ என்ற கதை எடுத்துரைக்கிறது. கணவன் கொண்டு வரும் ஊர்ச்சோற்றில் வாழ்க்கையை நடத்தினாலும், மனைவி தன் குழந்தைக்கு அதைத் தராமல் தான் ஆக்கிய உணவைத் தருவதில் தன்மானம் தலையெடுப்பதை உணர்த்துகிறது, ‘ஊர்ச்சோறு’ என்ற கதை.
விழி.பா.இதயவேந்தன், அன்பாதவன், அபிமானி, அழகிய பெரியவன், அமிர்தம் சூர்யா, பாமா, இமையம் ஆகியோர் கதைகளில், யதார்த்தம்  இழையோடியிருப்பதைக் காணலாம். பாமாவின், ‘அண்ணாச்சி’ கதை, அந்தச் சொல்லால் ஏற்பட்ட நிகழ்வை விநயமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. இமையத்தின், ‘மண் பாரம்’, விவசாயத்தை நம்பி வாழும் மக்களை இயற்கை வஞ்சிப்பதை எடுத்துக் கூறுகிறது. ‘பொன்னம்மாவின் குடும்பக்கதை’ என்ற குறுநாவலில், பொன்னம்மாவின் நீண்ட வரலாறு விலாவரியாகக் காட்டப் பெற்றுள்ளது.
தலித் இன மக்களின் அவலங்கள் பல கோணங்களில் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ள இந்த தொகுதி, தமிழ்ச் சிறுகதை உலகிற்குக் கிடைத்திருக்கும் ஆவணம்.
இராம.குருநாதன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us