செம்மொழித் தமிழாய்வு நிறுவனமும், இந்துக் கல்லுாரி தமிழ்த்துறையும் இணைந்து நடத்திய மூன்று நாள் கருத்தரங்கில், முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்கள் படைத்த, படித்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். ஐம்பெருங்காப்பியங்களில், இரட்டைக் காப்பியங்கள் என, போற்றப்பெறும் சிலப்பதிகாரம், மணிமேகலை நூல்களில் அமைந்துள்ள கருத்துக்களை ஆராய்ந்து எழுதப்பெற்றுள்ள நல்ல கட்டுரைகள்.
உளவியல், பண்பாடு, சமூகம், குடும்பம், அரசியல், இலக்கியச் சிறப்பு, சமயக் கோட்பாடுகள், பெண்ணியம் முதலியன பற்றிய ஆய்வுக் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. அறிஞர்களின் கட்டுரைகளில் கருத்துச் செறிவு இருப்பினும், பிழைகள் மலிந்துள்ளன.
‘மதுரை மாநகரில், மாதவியின் வீட்டில் கண்ணகி, கோவலனுக்கு தான் சமைத்த உணவைப் பரிமாறுகிறார்’ (பக்.154) என்று அச்சேறியுள்ளது. ஒரே எழுத்து மாறியமையால் மாதரி – மாதவியானாள். கதைக்கே களங்கமாகிறது. ‘சிலம்பில் மாதவியை சாத்தனார் அறிமுகம் செய்கிறார்’ (பக்.125) என்றுள்ளதைப் படிக்கும்போது, மனம் வலிக்கிறது. சிலப்பதிகாரத்தைச் சாத்தனார் இயற்றினார் என்று, ஆய்வு மன்றத்தில் பதிவு செய்யப் பெற்றுள்ளதா, அச்சில் குழப்பமா என்று ஆய்வு செய்ய வேண்டும்.
‘யாழை’ என்பது, ‘யாவை’ எனவும், மண்மகள் என்பது, ‘மணமகள்’ எனவும், பார்த்தால் என்பது, பார்த்தாள் (பக்.27) எனவும், ‘மயங்குவதற்கு’ என்பது, மட்ரங்குவதற்கு (பக்.27) எனவும் அச்சாகியுள்ளன. ‘மாலை வாரார் ஆயினும் மாண் இழை’ என்பது, ‘மாலை வரார் ஆயினும் மண் இழை’ (பக்.29) என, அச்சாகிப் பொருளில் குழப்பம் விளைவிக்கிறது. மூலச் செய்யுளடிகள் நான்கில் (பக்.29), பிழைகள் ஆறு உள்ளன. எடுத்துக்காட்டாகச் சில மட்டுமே சுட்டப்பெற்றுள்ளன.
‘இருந்தன’ என்பதை, ‘இருக்கப் பெற்றன’ என்றும், ‘இருந்தது’ என்பதை, ‘இருக்கப் பெற்றுள்ளது’ என்றும் (பக்.35) ஆய்வாளர் எழுதுவது, வட்டார வழக்காகவோ, கிளை மொழிச் சொற்களாகவோ இருக்கலாம் என, எண்ண வேண்டியுள்ளது. கருத்துக்களை மட்டுமே கணக்கில் கொண்டால், இது ஒரு சிறந்த நூல்.
பேரா.ம.நா.சந்தான கிருஷ்ணன்