கார்ட்டூனிஸ்ட் மதன், சுவாரஸ்யமான வரலாற்று எழுத்தாளரும் கூட. அவரது, ‘வந்தார்கள் வென்றார்கள்; கி.மு., – கி.பி.,’ வரிசையில், இந்த நூலும் இடம்பெறுகிறது. பூமி உருண்டை என சொன்னவர்களின் கதி என்னவாயிற்று என்பதில் துவங்கி, பால்வீதிகளில் பயணம் செய்து, பூமிக்கு நீர், காற்று எவ்வளவு முக்கியம் என்பது வரை, ஒளியின் வேகத்தை விட, மிக அதிகமாக கடந்து சென்று, வாசகனுக்கு எளிமையாக விவரிக்கிறார்.
‘கொடூரமான கிரகத்திற்கு ஏன், ரோம் நாட்டு காதல் பெண் கடவுள், வீனஸ் பெயரை வைத்தனர்; தூரத்திலிருந்து பார்த்து, அதை சொர்க்க பூமி என முடிவு கட்டிவிட்டனர்; அருகில் போய் பார்த்த பிறகு தான் தெரிந்தது... அதற்கு ராட்சசி என்று பெயர் வைத்திருக்கலாமே என தோன்றியிருக்கும்’ என்பது போன்ற, சுவாரசிய துணுக்குகள், புத்தகம் முழுக்க உள்ளன; ஆங்காங்கே, மதன் கார்ட்டூன்களும் உண்டு.
பூமி பற்றி சுவாரசியமாக அறிந்து கொள்ள, இந்த நூல் உதவும்.
சி.கலாதம்பி