இணையத்தில் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் நமக்கு வேண்டியதை தேடித் தர கூகுள் இருக்கிறது. அதேபோல, அரசு மற்றும் தனியார் துறைகளில் மாணவ, மாணவியருக்குக் கிடைக்கும் கல்வி உதவித் தொகைகள் மற்றும் கல்விக் கடன்களைப் பற்றிய தகவல்களும், எட்டுத் திக்கும் சிதறிக் கிடக்கின்றன. அவற்றை தேடிப் பிடித்து தருகிறது, இந்த நூல். இதுவரை, தமிழில் இப்படி ஒரு விரிவான தொகுப்பு வராதது ஆச்சரியமே.
ஒரு பக்கம் கல்லூரிகளில், போதிய மாணவர்கள் சேராமல் காலியிடங்கள் கிடக்கின்றன. மறுபக்கம், நல்ல மதிப்பெண் எடுத்த மகளை, கல்லூரிக்கு அனுப்ப முடியாத கூலித் தொழிலாளிக்கு உதவும்படி, நாளிதழ்களில் வேண்டுகோள்கள் வருகின்றன.
இப்படி ஒரு நிலை நீடிப்பது, சமூக அவலம் என்கிறார் நூலாசிரியர். இந்த தகவல் இடைவெளியை குறைக்கவே, இந்த தொகுப்பை வெளியிட முனைந்ததாக, பதிப்புரையில் குறிப்பிடுகிறார். இந்த நூல், இரண்டு ஆண்டு கடும் உழைப்பையாவது வாங்கியிருக்கும் என்பது, அதன், 302 பக்கங்களிலும் தெரிகிறது.
எங்கே, யாருக்கு, எவ்வளவு உதவித் தொகை கிடைக்கும் என்பதை பொறுமையுடன் கேட்டு, சேகரித்து, வகைப்படுத்தி, தொகுத்திருக்கிறார் நூலாசிரியர்.
நூலில், 60க்கும் மேற்பட்ட வகைப்பாடுகளில் உதவித் தொகைகள், கல்விக் கடன் அல்லது இதர கல்வி உதவிகளைப் பற்றிய தகவல்கள் இருக்கின்றன. எப்போது, எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்ற குறிப்புகளும், முகவரிகளும் தலைப்புகளின் இறுதியில் தரப்பட்டிருக்கின்றன.
சில பக்கங்களில், ஆங்கிலத்தில் தகவல்கள் தந்திருப்பதை தவிர்த்திருக்கலாம். இன்னும் சில முக்கிய தகவல்கள் விடுபட்டிருக்கலாம் என நூலாசிரியரே ஒப்புக்கொள்கிறார், அவற்றையும், மேலும் புதிய கல்வி உதவித் தொகைகளைப் பற்றிய தகவல்களையும் அடுத்த பதிப்பில் சேர்த்தால், இந்த தொகுப்பு மேலும் செறிவடையும்.
மாணவ பருவத்திலும், மணமாகி குழந்தைகள் பெற்று, அவர்களது கல்விக்கு உதவி நாடும் காலத்திலுமாக, ஒருவருக்கு வாழ்க்கையின் இருகட்டங்களில், இத்தகைய தகவல்கள் தேவைப்படும். அப்போது அவருக்கு ‘ஸ்காலர்சிப்’ தொகுப்பு நூல், கச்சிதமாக கைகொடுக்கும்.
– சசி