சமீபகாலமாக, தினந்தோறும் பத்திரிகைகளில் அடிபடும், பிரபல தாதா, ‘சோட்டா’ ராஜன் கைதின் மூலம், மீண்டும் மஞ்சள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது, தாவூத் இப்ராகிம் என்ற தாதாவின் பெயர். இந்த நிலையில் சுடச்சுட வந்துள்ளது, தாவூத் இப்ராகிமின் வரலாறு. இது தாவூத் என்ற தனிமனிதனின் வரலாறு மட்டுமல்ல; மும்பை நிழல் உலகத்தின் 60 ஆண்டுகால வரலாறு.
நமக்கு தெரிந்த மும்பை இதுவரை, கொண்டாட்டங்களுடன் இருந்திருந்தாலும், காலம் காலமாக சிந்திய ரத்தம், ஒவ்வொரு பக்கத்திலும் பதிந்துள்ளது.
பொதுமக்கள் கூடி இருக்கும் இடத்தில் துடிக்க துடிக்க கொல்வது, பெரும் முதலாளிகளை மிரட்டி பணம் பறிப்பது, பாலிவுட் கான்களை படத்தில் நடிக்க வைக்க சம்மதிப்பது, காவல் நிலையத்திலேயே போலீசாரை கொல்வது என, சினிமாவில் கூட நம்ப முடியாத பல நூற்றுக்கணக்கான காட்சிகள், இதுவரையில் மும்பையில் அன்றாட நிகழ்வாக இருந்துள்ளன.
அதில் குறிப்பிட்ட பங்கு, தமிழகத்திலிருந்து பஞ்சம் பிழைக்க மும்பை சென்ற தமிழர்களுக்கும் இருக்கிறது. அறுபதுகளின் இறுதி வரை, ஒட்டுமொத்த மும்பையின் நிழல் உலகத்தை இரண்டு தமிழர்கள், தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அவர்கள், வரதராஜ முதலியார், ஹாஜி மஸ்தான்.
இவர்களில், வரதராஜ முதலியார் என்ற வரதாபாய் (கமல்ஹாசன் நடித்த நாயகன் திரைப்படம், இவரை மனதில் வைத்தே எடுக்கப்பட்டது), தாவூத்தின் அணிக்கு எதிராக இருந்தார் என்பது சிறப்பு தகவல். இந்த நூலை புரட்டும் போதே, பத்து ‘கேங்க்ஸ்டர்’ படங்கள் பார்ப்பது போன்ற பிம்பங்கள் மனதில் தோன்றுகின்றன. தாவூத் இப்ராகிம் வாழ்க்கையின் முக்கியமான இரண்டு காலக்கட்டங்களில், அரசு இயந்திரம் தவறான வழியை கடைபிடித்ததை நூல் மூலம் அறிய முடிகிறது. அதுவே, இன்று வரை அவர், இந்திய அரசுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பதற்கான காரணம்.
ஒன்று, எழுபதுகளில், மும்பை முழுவதும் வியாபித்திருந்த தாதாக்களை ஒழிக்க, தாவூத் இப்ராகிமை வளர்த்து விட்டது. இரண்டு தரப்பையும் மோத விட்டால் ரவுடிகளின் எண்ணிக்கை பெரும் அளவில் குறையும் என்று தப்பாக கணக்கு போட்டது. ஆனால், எந்த அரசு இயந்திரத்தால் அவர் வளர்த்து விடப்பட்டாரோ, அவர்களுக்கே எதிராக நின்றது, பின்னாளைய வரலாறு.
மற்றொன்று, மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பின், சரணடையும் மனநிலையில் தாவூத் இருந்தபோது, சரணடைந்த யாகூப் மேமனை கையாண்ட விதம். நூலாசிரியரின் வார்த்தைகளில் சொல்லப் போனால், தெருநாயைப் போல் நடத்தப்பட்டார். இது, சரணடையும் மனநிலையில் இருந்த தாவூத் இப்ராகிமை பின் வாங்க வைத்தது.
இந்த இரண்டு பிரச்னைகளையும், அரசு இயந்திரம் நாசூக்காக கையாண்டிருந்தால், இந்த நேரம் மும்பை சிறையில் களி தின்னும் சிறைவாசிகளின் பட்டியலில், தாவூத்தின் பெயர் இருந்திருக்கும்.
மும்பையின் 60 ஆண்டு கால மாபியாக்களின் வரலாற்றில் ஒருவர் கூட, இந்த துறைக்கு வர வேண்டும் என்று எண்ணியதில்லை. அவர்கள், வறுமையோடு இருந்தாலும், நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைத்தவர்கள். காலமும் சூழலும் மட்டுமே அவர்களை அந்த நிலைக்கு கொண்டு வந்தது.
இந்திராகாந்தி காலத்தில் கொண்டு வரப்பட்ட அவசரநிலை பிரகடனம் மட்டும் வராவிட்டால், ஒட்டுமொத்த மும்பை நிர்வாகமும் தாதாக்களின் கைகளில் புதைந்திருக்கும். சட்டம் அமலான பின்னரே, அனைத்து தாதாக்களும் இரும்புக் கரம் கொண்டு ஒழிக்கப்பட்டனர்.
எல்லாவற்றையும் தாண்டி, ஒட்டுமொத்த மும்பையிலும், அனைத்து தாதாக்களாலும் மதிக்கப்படும் நேர்மையான, மாதம், 75 ரூபாய் சம்பளம் வாங்கும் போலீஸ்காரர் இப்ராகிம் காஸ்கரின் மகன் தான் தாவூத் என்பது, வாழ்வின் நேர் முரண்.
ஒருவேளை, தாவூத் இப்ராகிமின் பால்ய காலத்தில் மூன்று நேரமும் நிம்மதியான சாப்பாடு கிடைத்திருந்தால், இன்று ஒவ்வொரு நாட்டிலும் ஓடி ஒளியாமல், சொந்த மண்ணான மும்பையில் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கலாம்.
துப்பாக்கி எடுத்தவனுக்கு துப்பாக்கியால் தான் சாவு என்பது தான், நூல் முழுவதும் இழையோடும் நீதி.
வாசகனின் மனதில், மொழிபெயர்ப்பு நூலை படிக்கிறோம் என்ற உணர்வே ஏற்படாத வண்ணம் மொழிபெயர்த்திருக்கிறார், கார்த்திகா குமாரி. தெளிந்த நீரோடையைப் போல் இருக்கிறது, அவரது மொழிபெயர்ப்பு.
நூலாசிரியரைப் பற்றிய குறிப்பு, நூலின் பின்னட்டையில் உள்ளது. அவர், ‘ஆசியன் ஏஜ்’ உள்ளிட்ட நாளிதழ்களில் பணியாற்றியவர்.
ஆனால், மொழிபெயர்ப்பாளரைப் பற்றிய எந்த குறிப்பும், நூலில் இல்லை. அவர் பத்திரிகையாளர் என்று மட்டும், பதிப்புரையில் வருகிறது.
நூலை படித்து முடிக்கும் போது, பெரும் ஏமாற்றம் வாசகனின் மனதில் எஞ்சி நிற்கிறது, இதுபோன்ற புத்தகங்கள் ஏன் தமிழில் எழுதப்படுவதில்லை?
(கட்டுரையாளர், பத்திரிகையாளர் மற்றும் பாடலாசிரியர்)