புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும், தமிழை மறக்காத தமிழர் அரிசோனா மகாதேவன். கம்பனில் தோய்ந்தவர். அதேநேரம், வடமொழியிலேயே வால்மீகியையும் வாசித்தறிந்தவர். எனவே, வால்மீகியிலிருந்து எங்கெல்லாம் கம்பன் வித்தியாசப்படுகிறான், மூலக்கதையின் சம்பவங்களை தமிழ்ப் பண்பாடு கெடாமல் எப்படியெல்லாம் மாற்றி உருவகப்படுத்துகிறான் என்ற அருமையான ஒப்பீட்டு நோக்கில், தாம் ஆய்ந்து தெளிந்த விஷயங்களை, நான்கு கட்டுரைகளில் வடித்தெடுத்து வழங்கியுள்ளார்.
அகலிகை சாபவிமோசனம், ராமன் – சீதை முதல் சந்திப்பு, வனவாச காலத்தில் நிகழ்ந்த மாயமான் காணல், ராவணன் சீதையைக் கவர்ந்து செல்லல், சீதைக்கு ராமன் வைத்த அக்கினிப் பரீட்சை ஆகிய சம்பவங்கள், அவர் ஆய்வுக்கு உட்பட்டவையாக அமைந்துள்ளன.
ராமன் புலால் உணவை ஏற்றவனா, மறுத்தவனா என்பது போன்ற விஷயங்களை, நேரிய ஒப்பீடுகளுடன் அலசுகிறார். நூலில் மேலும் சில கட்டுரைகள், வழக்காடு மன்றப் பாணியில் சீதை, பாஞ்சாலி ஆகியோர், தம் வாதங்களை முன்வைப்பதாக அமைந்துள்ளன. நம்மைச் சிந்திக்க வைப்பதாகவும், நம்முன் காவிய ரசனையைத் துாண்டும் வகையிலும் அமைந்துள்ள நூல் இது.
கவுதம நீலாம்பரன்