கவுடல்யர், விஷ்ணு குப்தர் எனும் பெயர்களைக் கொண்டவர் சாணக்கியர். அவர் எழுதிய அர்த்தசாஸ்திரம் எனும் பொருள் நூலின் தமிழ் வடிவம் தான் கவுடலீயம். அர்த்தசாஸ்திரம் என்பது, பொருள் நூல் எனப்படும். இதன் மூன்று அதிகரணங்களைத் தமிழ் விளக்கவுரையுடன் பண்டிதமணி கதிரேச செட்டியார் படைத்துத் தந்துள்ளார். புலனடக்கத்தைத் துறவிக்கு உரியது என்று நாம் நினைப்போம். ஆனால், புலனடக்கம், மன்னனுக்கும் தேவை என்று உணர்த்தியுள்ளார் சாணக்கியர்.
நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தவன், தொடுக்கப்பட்டவன் தொடர்பான ஒரு கருத்து இதோ: தொடுத்தவன் எண்ணித் துணிந்தவன் ஆகலானும், தொடுக்கப்பட்டவன் அங்ஙனம் இலன் ஆகலானும், தொடுக்கப்பட்டவன் விடையைக் குறித்து, தொடுத்தவன் அன்றே மறுத்துக் கூறல் வேண்டும். இன்றேல் தோல்வி அடைந்தவன் ஆவான். அப்போதே விடை கூற முடியாத எதிர் வழக்காளிக்கு (விடை கூற), மூன்று நாள் முதல், ஏழு நாள் அவகாசம் கொடுத்தல் வேண்டும். இக்கால எல்லைக்கு மேற்படின் மூன்று பணம் முதல், பன்னிரண்டு பணம் வரை தண்டமாம் (பக்.491)
முகிலை ராசபாண்டியன்