‘பெரியாரின் மறுபக்கம்’ என்ற தமது நூலால் அறியப்பட்டவர் ம.வெங்கடேசன். அவரது மற்றொரு நூல், ‘தலித்களுக்காகப் பாடுபட்டதா நீதிக்கட்சி?’ என்ற தலைப்பில், கிழக்கு பதிப்பக வெளியீடாக விரைவில் வெளியாக உள்ளது.
நூலில் இருந்து சில பகுதிகள்: தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம் குறித்து எழுதும் போதெல்லாம், பேசும் போதெல்லாம், ‘நீதிக்கட்சி’யின் ஆட்சி குறித்துத் திராவிடக் கழகத்தவர் முதல், பல எழுத்தாளர்கள் வரை பெருமைப் பொங்கக் கூறுகின்றனர்.
இவர்கள் இவ்வாறு எழுதுவதன் நோக்கமென்ன?
தாழ்த்தப்பட்டோர் சிந்தனையற்றோராகவும் செயலற்றோராகவும் இருந்தார்கள் என்றும், தாழ்த்தப்பட்டவரிடையே அரசியல் அனுபவமுள்ளோர் ஒரு சிலரே என்றும், தாழ்த்தப்பட்டோருக்கான உரிமையையும் முன்னேற்றத்தையும், பார்ப்பனரல்லாத உயர்சாதி இந்துக்களால் வழிநடத்தப்பட்ட நீதிக்கட்சி மற்றும் ஈ.வெ.ராமசாமி நாயக்கராலேயே செய்ய முடிந்தது என்று தாழ்த்தப்பட்டோர் நம்ப வேண்டும் என்பதுமே அவர்களின் நோக்கம்.
‘திராவிடர் ஹோம்’பார்ப்பனரல்லாதாரில், உயர்ந்த ஜாதியினர் தாழ்ந்த ஜாதியினர் என பாராது, அனைவர்க்கும் இடம் தரும், ‘திராவிடர் ஹோம்’, பார்ப்பனரல்லாதாரில் உயர்ந்த ஜாதியாராகிய, சி.நடேச முதலியாரால் உருவாக்கப்பட்டது என்பதும் அறிகிறோம்.
உரிமைகள் தமக்கும் உண்டு என்பது கூட அறியாராய், தமது உரிமைகள் எவை என்பதை அறியாராய் வாழ்ந்து கொண்டிருந்த தாழ்த்தப்பட்டோர் உரிமைகளுக்காக, லண்டன் மாநகரத்தில் திராவிடச் சங்கம் சார்பில், சான்றுரை பகர்ந்தவர் பார்ப்பனரல்லாதாரில் உயர்ந்த ஜாதியாராகிய, சர். ஏ. இராமசாமி முதலியார் என்பதையும் அறிகிறோம்.
இப்படிக் கூறுவதன் நோக்கமென்ன?
பார்ப்பனரல்லாதாரில் உயர்ந்த ஜாதியைச் சார்ந்தவர்கள் தான் தாழ்த்தப்பட்டோருக்காக போராடியோர் என்பதை தெரியப்படுத்துவதற்குத் தான். ஆனால் உண்மை என்ன?
உண்மையிலேயே, நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டோரின் உரிமைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பாடுபடத்தான் தோன்றியதா?
நீதிக்கட்சி இல்லாத போது சிந்தனையற்றும் செயலற்றும், உரிமைகள் தமக்கும் உண்டு என்பது கூட அறியாராய், தமது உரிமைகள் எவை என்பதை அறியாராய், வாழ்ந்து கொண்டிருந்தனரா தாழ்த்தப்பட்டோர்?
தாழ்த்தப்பட்டோரிடையே அரசியல் அனுபவம் உள்ளோர் இல்லாது இருந்தார்களா? நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டோரை உயர்த்தும் பணியைத் தொடர்ந்து செய்து வந்ததா? நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டோருக்கு செய்த சாதனை தான் என்ன?
இந்தக் கேள்விகள் மிக மிக முக்கியமானவை. இந்தக் கேள்விகள் ஒவ்வொன்றையும் மிக விரிவாகவே நாம் ஆராய்வோம்.
விருப்பு வெறுப்பு இல்லாமல், ஓர் ஆராய்ச்சி முறையில் நாம் நீதிக்கட்சிப் பற்றியும், தாழ்த்தப்பட்டவர்கள் நிலைமை பற்றியும் இவர்கள் கூறியிருக்கின்ற கருத்துக்களை ஆராய்ச்சி செய்து பார்த்தோமானால், நிச்சயமாகவே இவர்கள் கூறியிருக்கின்ற கருத்துக்கள் அப்பட்டமான வரலாற்றுப் பொய்கள் என்பது புலப்படும்.
தாழ்த்தப்பட்டோரின் அரசியல் தாழ்த்தப்பட்டோர், எப்பொழுதுமே தங்கள் உரிமைகளுக்காக போராட்டங்களில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர் என்பதைத்தான் சரித்திரம் நமக்கு சான்று பகர்கின்றது.
* 1779ல் சென்னை நகரத்தின் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கருகில் இருந்த தங்களின் குடிசைகளை அப்புறப்படுத்துவதை எதிர்த்துக் கிழக்கிந்தியக் கம்பெனியாருக்குத் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரு விண்ணப்பம் அளித்தனர்
* 1810ல் அந்தக் காலத்தில், ‘பறச்சேரி’ என வழங்கிய பகுதியிலிருந்த தங்களின் குடிசைகளுக்கு விதிக்கப்பட்ட உரிமைத் துறப்பு வரிவிதிப்பை எதிர்த்து, செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்த பிரிட்டிஷ் நிர்வாகத்தாருக்கு மனு அளித்தனர். பிற்காலத்தில் இந்த இடம், ‘பிளாக் டவுன்’ என்று ஆனது
* 1870ல், ‘ஆதிதிராவிட மகாஜன சபை’ என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டனர்; அது பதிவு செய்யப்படாதது. பின்பு, 1892ல் அது பதிவு செய்யப்பட்டது
* 1917ல் இந்தியாவுக்கு வந்த மாண்டேகு –- செம்ஸ்போர்டு துாது குழுவினரிடம், ஒரு மகஜரைக் கொடுத்து, தங்களை, ‘ஆதிதிராவிடர்’ என்று குறிப்பிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இந்த மகாஜன சபையின் செயலர், எம்.சி.ராஜா
* 1922ல் அப்போதைய ஆளுநர் வெலிங்டன் பிரபுவால், சட்டமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றபோது, ‘ஆதிதிராவிடர்’ என்ற பெயரைச் சட்டபூர்வமாக ஏற்கச் செய்தார், எம்.சி.ராஜா. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் இருந்த தீண்டாதோர், ‘ஆதி
திராவிடர்’ எனப்படலாயினர். பின்னர் ஆந்திரம், கர்நாடகம் ஆகிய பகுதிகளில் இருந்த தீண்டாதார் முறையே, ‘ஆதி
ஆந்திரர்’, ‘ஆதி கர்நாடகர்’ எனப்பட்டனர்
* 1891ல் ‘திராவிட மகாஜன சபா’ என்ற பெயரில் ஒரு சங்கத்தை ஏற்படுத்தினர்
* 1891ல் சென்னையிலிருந்த ஷெட்யூல்டு வகுப்பாரின் தலைவர்கள், ‘ஆதிதிராவிட மகாஜன சபா’ என்று இன்னொரு சங்கத்தை ஏற்படுத்தினர். இந்தச் சங்கமும், ஷெட்யூல்டு வகுப்பாரின் நலன்களுக்காகப் பாடுபட்டது
* 1892ல் சென்னை அரசாங்கம், அப்போது பதிவுத்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்த எஸ்.ராகவ ஐயங்காரை, சென்னை மாகாணத்தில், ஷெட்யூல்டு வகுப்பாரின் முன்னேற்றம் பற்றி விசாரிப்பதற்கு நியமித்தது
* 1892ல் நடந்த, சாதி இந்துக்களின் மாநாடு ஒன்றில் கலந்து கொண்ட அயோத்திதாசப் பண்டிதரும் மற்றும் ஷெட்யூல்டு வகுப்பைச் சார்ந்த தலைவர்களும், ஷெட்டியூல்டு வகுப்பைச் சார்ந்த பிள்ளைகள் படிப்பதற்கு, கிராமங்களில் பள்ளிக்கூடங்களைத் திறக்க வேண்டும் என்றும், பயன்படுத்தப்படாமல் கிடக்கும் புறம்போக்கு நிலங்களை ஆங்காங்கே உள்ள ஷெட்யூல்டு வகுப்பாருக்கு ஒதுக்கித் தர வேண்டும் என்றும், அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டு தீர்மானங்கள் நிறைவேற்றினர்.
சாதி இந்துக்களின் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மேற்படி தீர்மானங்களை, ராவ் பகதுார் இரட்டைமலை சீனிவாசன், ஒரு மாநாட்டைக் கூட்டி மீண்டும் நிறைவேற்றி அனுப்பினார்.
அப்போதைய சென்னை அரசாங்கம், இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கோண்டு, நிலமில்லாத ஷெட்டியூல்டு வகுப்பாருக்கும் முன்னாள் படை வீரர்களுக்கும் நிலங்களை ஒதுக்கி அளிக்கவும், பள்ளிகளைத் தொடங்கவும் உத்தரவு பிறப்பித்தது.