‘மக்கள் தமிழ்’ எனும் எளிமைத் தமிழ் உரைநடையை உருவாக்கி, பாமரர்களையும் பத்திரிகை படிக்க வைத்தவர், சி.பா. ஆதித்தனார். லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்று சிங்கப்பூரில் மிகப்பெரிய வழக்கறிஞராக விளங்கினார்.
இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்ததன் விளைவாக பல இன்னல்களுக்கிடையே தாயகம் திரும்பினார். வழக்கறிஞர் பட்டம் பெற்றிருந்தாலும் தமிழ் மீதும், இதழியல் மீதும் நாட்டம் கொண்ட ஆதித்தனார், ‘தமிழன், மதுரை முரசு, தந்தி’ போன்ற இதழ்களைத் தொடங்கி நடத்தினார்.
தமது இதழ்களில், பேச்சுத் தமிழே இடம்பெற வேண்டும் என, விரும்பினார். அதைக் கொச்சை இல்லாமலும், பிழை இல்லாமலும் எழுதி வெற்றி கண்டார். ‘இதழாளர் கையேட்டை’ வெளியிட்டார். நாளிதழ்களைத் தொடர்ந்து மாலை இதழான, மாலை முரசு; வார இதழான, ராணி; திங்கள் இதழான, ராணி முத்து போன்ற இதழ்களை வெளியிட்டு வெற்றி கண்டார். ஆங்கிலத்தில் இருந்த சட்டசபை விதிகளை எல்லாம் தமிழில் மொழிபெயர்த்து, ‘தமிழக சட்டசபை நடைமுறை விதிகள்’ எனும் நூலை வெளியிட்டார். அவரது முழுமையான வரலாற்றை ஓர் ஆய்வு நூலாகத் தந்துள்ளார் நூலாசிரியர்.
-புலவர்.சு.மதியழகன்